மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் சத்தீஸ்கரின் பிஜாப்பூரில் 1,000க்கும் மேற்பட்ட நக்சல்களைச் சுற்றி வளைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் ஈடுபட்ட இந்த நடவடிக்கையில் இதுவரை குறைந்தது 5 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சலிசத்தை ஒழிக்க மார்ச் 31, 2026 வரை காலக்கெடு நிர்ணயித்த நிலையில், இந்த மிகப்பெரிய நடவடிக்கையில் பாதுகாப்புப் படை இறங்கியுள்ளது. சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள கர்ரேகுட்டா மலைகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, நக்சல்கள் தப்பிக்கும் அனைத்து வழிகளையும் துண்டித்துள்ளனர்.
தலைமறைவான மற்றும் மிகவும் தேடப்படும் தளபதி ஹிட்மா மற்றும் பட்டாலியன் தலைவர் தேவா உள்ளிட்ட உயர் நக்சல் தலைவர்கள் இருக்கும் இடம் குறித்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுக் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. அடர்ந்த காடுகள் மற்றும் தொடர் மலைகளால் சூழப்பட்ட இந்தப் பகுதி, மாவோயிஸ்டுகளின் பட்டாலியன் எண் 1 இன் தளமாகக் கருதப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, நக்சல்கள் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு, மலைப்பகுதிகளுக்குள் நுழைய வேண்டாம் என்று கிராம மக்களை எச்சரித்தனர். மேலும் இப்பகுதியில் ஏராளமான வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர் என்று கூறப்படுகிறது.