உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடல்!
எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் 24ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள் நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு காத்திரமான பங்களிப்பு வழங்கியமைக்கு நன்றியினைத் தெரிவித்ததுடன், இம் முறையும் பிரதேச செயலாளர்களின் பங்கு அதிகளவில் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், தங்கள் பிரிவில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தெரிவித்ததுடன் தேர்தல் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவித்தெரிவத்தாட்சி அலுவலர்களான பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.