பு.கஜிந்தன்
என்.பி.பிக்கு வாக்களிப்பதன் மூலம் சட்டவிரோதமான தையிட்டி திஸ்ஸ விஹாரையை சட்ட ரீதியான விகாரையாக மாற்றக்கூடிய சூழ்நிலை உள்ளதாக, சங்கு சின்னத்தில், யாழ்ப்பாணம் மாநகர சபையில் போட்டியிடும் ஐக்கிய தமிழர் ஒன்றியத்தின் வேட்பாளர் திரு.மதுரகன் தெரிவித்துள்ளார்.
22ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்.பி.பியின் வருகையால் தமிழ் மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. ஏற்கனவே எமது மக்கள் பெருவாரியான வாக்குகளை வழங்கி ஆளும் கட்சியில் 3 எம்.பிகளை தெரிவு செய்து அரசுக்கு வலுவை வழங்கியுள்ளனர். இவ்வாறு இருந்தும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு என்ன செய்தது?
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் பயங்கரவாத தடைச் சட்டமானது இன்னமும் நீக்கப்படவில்லை. ஏன் அதனை நீக்கவில்லை?
கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் தலைமையில் கூட்டத்தில், தமக்கு ஆதரவை வழங்கி தம்மை வலுப்படுத்துமாறும், அவ்வாறு வலுப்படுத்தினால் தான் தாங்கள் வடக்கு – கிழக்கிற்கு அபிவிருத்திகளை செய்ய முடியும் என்று ஜனாதிபதி கூறுகின்றார். ஏற்கனவே நாங்கள் ஆதரவு வழங்கி 3 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தோம் அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
தையிட்டி விகாரையானது தனியார் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம் ஆகும். அந்த சட்டவிரோத கட்டடத்தை ஏன் இந்த என்.பி.பி அரசாங்கம் இன்னமும் அகற்றவில்லை? மீண்டும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் ஆதரவு வழங்கினால் அவர்கள் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி சட்டவிரோத கட்டடங்களை சட்டரீதியான கட்டடங்களாக மாற்றுவதற்கு அனுமதிகளை வழங்குவார்கள்.
என்.பி.பிக்கு வாக்களித்தால் இன்னும் சிறிது காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்த சுவடுகளையே இல்லாமல் ஆக்குவதற்கு இந்த என்.பி.பி அரசாங்கம் வழி வகுக்கும் என்றார்.