அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுவதை சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாருக்கு எதிராகவேனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிமன்றங்களும் நீதிக் கட்டமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு தலமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்ட செயலாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நாடெங்கிலும் ஓரே நாளில் நடத்தப்படாமல், சிலவற்றுக்கான தேர்தல் திகதி ஒத்திவைக்கப்படுமாயின், முதலில் நடைபெறுகின்ற பிரதேசங்களின் தேர்தல் முடிவுகள், பின்னர் நடத்தப்படும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தினை செலுத்தும் எனத் தெரிவித்துடன், குறித்த விடயங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.