பு.கஜிந்தன்
ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை – பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்குவதைத்தவிர வேறுவழியில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் எச்சரிக்கைவிடுத்தார்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான ஏப்ரல் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் கடந்த புதன்கிழமை (23.04.2025) இடம்பெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றபோதும் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மந்தமாக இருக்கின்றது. இதற்கும் அப்பால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் தொடர்பில் மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.
மக்களை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே பதவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனை மறந்து சில உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் செயலர்கள் இழைக்கின்ற தவறுகளால் ஒட்டுமொத்தமாக எல்லோருக்குமே பாதிப்பு ஏற்படுகின்றது. எமது நிர்வாகக் கட்டமைப்பிலிருக்கின்ற இவர்களின் தவறுகளுக்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் எனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். முன்னைய ஆட்சிக் காலங்களில் எமது மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு முன்வந்த பலர் பல்வேறு காரணங்களால் குறிப்பாக இலஞ்சம் கோரியமையால் திரும்பிச் சென்றனர். அவர்கள் இப்போதும் மீண்டும் வருகின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்குகளை நேரிய சிந்தனையுடன் அதிகாரிகள் செய்துகொடுக்கவேண்டும், என்று குறிப்பிட்டார்.
கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆளுநர் இதன் பின்னர் ஆராய்ந்தார். விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான 10 சதவீதக் கழிவு தொடர்பான விவகாரத்தில் ஒவ்வொரு சந்தையாக நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருப்பதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டார். அந்தச் சந்தையுடன் தொடர்புடைய விவசாய அமைப்புக்களை முதல் கட்டமாக சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார். வீதிகளில் குப்பைகள் போடும் செயற்பாடு தொடர்கின்ற நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சி.சி.ரி.வி. கமெராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.
சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காண்பிக்கும் நிலைமை காணப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் சட்டவிரோத கட்டுமானங்களை உள்ளூராட்சி மன்றங்கள் நேரடியாக இடித்தழிக்கக் கூடியதாக இருந்ததாகவும் தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டினுள் உள்ளமையால் தம்மால் வழக்குத் தாக்கல் செய்யக் கூடியதே ஒரே வழி எனக் குறிப்பிட்டனர். இதன்போது தொடரப்பட்ட பல வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் தெரிவித்தனர். குறிப்பாக யாழ். மாநகர சபையால் சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் யாழ். மாநகர சபையாலேயே வழக்கு மீளப் பெறப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன என ஆணையாளர் குறிப்பிட்டார். அவ்வாறு மீளப்பெறப்பட்ட வழக்குகள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து மீளவும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேபோல வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் சட்டவிரோதமானவையே. அதனை அகற்றுவதற்கான தொடர் நடவடிக்கை உள்ளூராட்சி மன்றங்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தினார். மேலும், இந்த விடயங்களில் உள்ளூராட்சி மன்றங்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார். மரம் நடுகையை ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றங்களும் ஊக்குவித்து செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து வடக்கின் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் கட்டட அனுமதி, ஆதனப் பெயர் மாற்றம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அவற்றில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை என்பன தொடர்பில் ஆராயப்பட்டன. இவற்றுக்கான அனுமதி வழங்குவதில் உள்ள தாமதங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அவற்றைக் களைவதற்கு தொடர்புடைய திணைக்களங்களை எதிர்காலத்தில் அழைத்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது.
வவுனியா நகர சபை மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய ஆளணிகள் வழங்குவது மற்றும் கட்டடங்கள் அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மேலும், வீதிப் போக்குவரத்துத் தொடர்பில் கடந்த கூட்டத்தில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் அது தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் தெரிவித்தனர். அதேபோல நகர அபிவிருத்தி அதிகார சபையுடனான விவகாரங்களிலும் முன்னேற்றம் உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர்.