”அநுரகுமார அரசினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகங்கள்,காட்டிக்கொடுப்புக்கள் பேரினவாத தலைவர்களினால் தியாகங்களாக்கப்பட்டு அவர் ஒரு தேசிய வீரராக போற்றப்படும் நிலையில் பிள்ளையானால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்,ஆட்கடத்தல்கள், காணாமல்போகச்செய்தல்கள், கப்பம் கோரல்கள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் தமிழர் தரப்பிலிருந்து எழுந்துள்ளன”
கே.பாலா
தமிழ் மக்கள் ஆதரிப்பவற்றை சிங்களவர்கள் எதிர்ப்பார்கள், தமிழ் மக்கள் எதிர்ப்பவற்றை சிங்களவர்கள் ஆதரிப்பார்கள்.தமிழர்களின் விரோதிகள் சிங்களவர்களின் நண்பர்கள் ,சிங்களவர்களின் நண்பர்கள் தமிழர்களின் விரோதிகள் தமிழர்களின் துரோகிகள் சிங்களவர்களின் தேசியவீரர்கள் .சிங்களவர்களின் தேசியவீரர்கள் தமிழர்களின் தேசத்துரோகிகள் .இந்த மனநிலைதான் இலங்கையில் சிங்களவர்-தமிழர்களின் முரண் நிலையாகி இனப்பிரச்சினை தீராப்பிரச்சினையாகத் தொடர இன்னும் காரணமாகவுள்ளது.
இலங்கையில் சிங்கள -தமிழர் இனப் பிரச்சினைக்கான மையப்புள்ளியான ”இனவாதம்”அல்லது சிங்கள -தமிழர் பிரிவினைக்கு காரணமான ”முரண்நிலை” தற்போது ”பிள்ளையான் என்ற தேசிய வீரன்-பிள்ளையான் என்ற தமிழினத் துரோகி”என்ற ஒருவரின் இரு கதாபாத்திரங்கள் ஊடாக மீண்டுமொரு தடவை வெளிப்பட்டு இலங்கையில் சிங்களம் -தமிழ் என்ற இரு துருவங்கள் என்றும் இணைய முடியாது,சிங்களம்-தமிழ் என்ற முரண் நிலையை ஒருபோதும் களைய முடியாது என்ற வரலாற்று உண்மையை நிரூபித்துள்ளன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 18 ஆண்டுகளின் பின்னர், கடந்த 8ஆம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ராஜபக்ஸக்களின் அரசின் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் கனிஷ்ட தலைவர்களில் ஒருவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையான் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சிங்கள-தமிழ் முரண் நிலை மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அக் கைது உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான கைதாக பேரினவாத தலைவர்களினால் திசை மாற்றப்பட்டு ”உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி பிள்ளையான் ”என்று தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு சித்திரிக்க முற்படுவதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில்தான் விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும் தமிழ் மக்களையும் காட்டிக்கொடுத்த ”தமிழினத் துரோகி” என தமிழ் மக்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ”பிள்ளையான்”தற்போதைய கைதின் பின்னர் சிங்கள பேரினவாத தலைவர்களினாலும் பேரினவாத கட்சிகளினாலும் ”தேச பக்தன்”,”தேசிய வீரன் ”எனக் கொண்டாடப்படுவதுதான் சிங்களம்-தமிழ் என்ற முரண் நிலையை ஒருபோதும் களைய முடியாது என்ற வரலாற்று உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான பிள்ளையான் கருணா என அழைக்கப்படும் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்த விநாயகமூர்த்தி முரளிதரனுடன் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியேறி கருணா குழுவில் முக்கிய தலைவராக செயற்பட்டார்.அத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அரசியல் கட்சியையும் கருணா ஆரம்பித்து அதன் தலைவராக இருந்தார் .இந்நிலையில் 2007 ஏப்ரலில் கருணா அணியில் இடம்பெற்ற உள்ளக மோதல்களைத் தொடர்ந்து கருணா லண்டனுக்குத் தப்பி ஓடியதை அடுத்து பிள்ளையான் அக்கட்சியின் தலைவரானார். தொடர்ந்து 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கிழக்கு மாகாணத்தின் முதலாவது தமிழ் முதலமைச்சரானார்.2012 ஆம் ஆண்டுவரை அவர் முதலமைச்சராக பதவி வகித்தார்.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்ட சந்திரகாந்தன் 2015 அக்டோபர் 14 அன்று கைது செய்யப்பட்டுக் சிறையில் வைக்கப்பட்டார். பிள்ளையான் சிறையில் இருந்தவாறே 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.இதனையடுத்து 2015 அக்டோபரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பிள்ளையான் 2020 நவம்பர் 24 ஆம் திகதி கோத்தபாய ராஜபக்ஸ அரசினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவினால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழும் அதே பதவியில் தொடர்ந்து நீடித்தார்.2024 ஜனாதிபதி தேர்தலில் பிள்ளையானும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆதரவாளர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தனர். ரணில் தோல்வியடைந்தார் . 2024 பாராளுமன்ற தேர்தலில் பிள்ளையானும் அவரது கட்சியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுதோல்வியை சந்தித்தனர்
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து அவர்களுக்கு துரோகம் செய்து விட்டு வெளியேறி அரசுடனும் இராணுவத்துடனும் இணைந்து விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்ததுடன் பிள்ளையானுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.க்களான ஜோசப் பரராஜசிங்கம்,ரவிராஜ் ஆகியோரின் கொலைகளுடன் தொடர்பிருந்தது.அதுமட்டுமன்றி இன்னும் தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவான பலரின் படுகொலைகள், ஆட்களை காணாமல் போகச் செய்தமை, ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் ,உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு உதவியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் மீது உள்ளன.
ஆனால் இவைகளையெல்லாம் மறுத்த பிள்ளையான் ,புலிகளே தமக்கு துரோகம் செய்ததாகவும் அப்படி இருந்தும் தானோ தனது குழுவினரோ புலிகளை எந்த இடத்திலும் காட்டிக்கொடுக்கவில்லை, புலிகள் தொடர்பில் இராணுவத்திற்கு தகவல்களை வழங்கவில்லை. புலிகள் அமைப்பில் இருந்தபோதிருந்த அதே உணர்வுடனேயே தற்போதும் இருப்பதாக தொடர்ந்து கூறிவந்தாலும் தமிழ் மக்கள் பிள்ளையானை தமிழினத் துரோகி ,தேசத்து துரோகி என்றே அடையாளப்படுத்தினர்.பிள்ளையானின் பிரதேச வாதத்திற்கு ஈர்க்கப்பட்ட சிலரே பிள்ளையானை ஆதரித்தனர். இராணுவ,புலனாய்வுப் பிரிவுகளும் எந்த இடத்திலும் பிள்ளையானுக்கு தமக்கும் தொடர்பிருப்பதாக ஏற்றுக் கொள்ளவில்லை. பிள்ளையானை புலிகளுக்கு எதிராக பயன்படுத்தியதை வெளியில் தெரிவிக்கவும் இல்லை.
இவ்வாறானதொரு நிலையில்தான் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அநுரகுமார அரசினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகங்கள்,காட்டிக்கொடுப்புக்கள் பேரினவாத தலைவர்களானால் ஒப்புக்கொள்ளப்பட்டு வருவதுடன் பிள்ளையானும் தன்னை பாதுகாத்துக்கொள்ள தான் விடுதலைப்புலிகளுக்கு செய்த துரோகங்களையும் தமிழினத்திற்கு எதிரான போரில் இராணுவத்துக்கு செய்த காட்டிக் கொடுப்புக்களையும் கூறிப் புலம்பத் தொடங்கியுள்ளார்.
தான் விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுக்கவில்லை,தமிழினத்துக்கு துரோகம் செய்யவில்லையென பிள்ளையான் இதுவரை கூறிவந்த நிலையில் ,சில தினங்களுக்கு முன்னர் பிள்ளையானை சிறையில் சந்தித்த அவரின் சட்டத்தரணியும் பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் ராஜபக்ஸ அரசில் அமைச்சராகவிருந்தவரும் தீவிர இனவாதியுமான உதய கம்மன்பில பிள்ளையான் தொடர்பில் கூறுகையில் ,
நான் பிள்ளையானுடன் சுமார் 30 நிமிடங்கள் பேசினேன். பிள்ளையான் கண்கலங்கியபடி என்னிடம் சொன்னார்: ‘நான் புலிகளிடம் இருந்து விலகி வந்து, அவர்களை தோற்கடிக்க என் உயிரை பணயமாக வைத்து போராடினேன். அன்று புலிகள் பக்கம் இருந்தவர்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், பெரிய வியாபாரிகள், என்ஜிஓ தலைவர்கள். அவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக வாழ்கிறார்கள். ஆனால், ஒரு பொய்யான வழக்குக்காக நான் ஐந்து வருடங்கள் விளக்கமறியலில் இருந்தேன். இறுதியில் வழக்குக்கு சாட்சிகள் இல்லை என்பதற்காக விடுவிக்கப்பட்டேன். இப்போது மீண்டும் என்னை கைது செய்துள்ளனர். நாட்டுக்காக செய்த பணிக்கு இதுதான் பரிசா?’ எனக் கேட்டார்.
சமூக ஊடகங்களில் பிள்ளையான் மீது விமர்சனம் செய்யும் இளைஞர்களுக்கு, அவர் யார் என்பது கூட தெரியாது. உண்மையில், பிள்ளையான் போன்றோர் நாட்டுக்காக செய்த பணிக்காக தேசிய வீரராக மதிக்கப்பட வேண்டும். கருணா மற்றும் பிள்ளையான் புலிகளில் இருந்து விலகி எமது இராணுவத்துடன் சேர்ந்ததிலிருந்தே புலிகள் வீழ்ச்சி தொடங்கியது. பிள்ளையானும் , கருணா அம்மானும் இராணுவத்திற்கு பெரும் துணையாக இருந்தனர். இவர்கள் 2003-இல் புலிகளிலிருந்து விலகினார்கள். பிள்ளையான் ஒரு உண்மையான தேசபக்தர்.
2006 இல் பிள்ளையான் மற்றும் அவருடைய குழு இராணுவத்துடன் சேர்ந்து புலிகளுக்கு எதிராக போராடினர். ஆனால் புலிகள் பக்கம் இருந்து வந்தவர்கள், நாட்டின் வட பகுதியிலிருந்து வந்தவர்கள். ஆகவே, கிழக்கு பகுதியை எளிதில் காத்துக் கொள்ள முடிந்தது. இப்படி சமாதான நாடு உருவாக்கப்பட்டது பிள்ளையான் போன்றவர்கள் உயிரைப் பணயமாக வைத்து போராடியதால்தான்.
பிள்ளையானின் செயல்களுக்கு எதிராக பிரிவினைவாதிகள் அவரை அழிக்கவே விரும்புகிறார்கள். அதனால்தான் தேசிய மக்கள் சக்தியின் வழியாக அவருக்கு எதிரான சதி நடத்தப்பட்டுள்ளது. அந்த துணைவேந்தர் காணாமல் போனது பிள்ளையானுடன் தொடர்புடையதா இல்லையா என்பதை ஒருபுறம் வைக்கலாம் .ஏனெனில் , இன்று புலிகள் அரசியல்வாதிகளாக பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். தெற்கு துரோகிகளும் ஜனாதிபதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த விதமான விசாரணையுமில்லை. ஆனால் பிள்ளையானுக்கு மட்டும் விதி வேறு. பிள்ளையான் செய்த தவறு – புலிகளிலிருந்து விலகி, நாட்டை காப்பாற்ற உதவியது. இதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு – சிறை.பிள்ளையான் என்னை தனிப்பட்ட முறையில் இரு முறை மட்டுமே சந்தித்துள்ளார். ஆனால் அவருக்காக நான் இங்கே நிற்பது, பயங்கரவாதத்திற்கு எதிராக நின்றதற்காக யாரையும் தண்டிக்கக் கூடாது என்பதற்காகவே. நாம் அப்படி நிற்காதுவிட்டால் எதிர்காலத்தில் எவரும் தீவிரவாதத்தைக் கைவிட்டு நாட்டுக்கு உதவ முன்வரமாட்டார்கள்.”என்கின்றார்
பிள்ளையான் புலிகள் அமைப்பில் இருந்து விலகி, எமது இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டமை போரை முடிப்பதற்கு ஓரளவு பங்களிப்பாக அமைந்தது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவரும் முன்னாள் படைத்தளபதிகளில் ஒருவருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் தெரிவித்துள்ளார். அதேவேளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களை இலக்காகக் கொண்டு இந்த அரசு செயற்படுவதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஸவும் கூறியுள்ளார்.
ஆக தான் தமிழ் மக்களின் உரிமைக்காகவே தற்போது உழைப்பதாகவும் இராணுவத்துடன் இணைந்து செயற்படவில்லையெனவும் புலிகளையோ போராட்டத்தையோ காட்டிக்கொடுக்கவில்லையெனவும் பிள்ளையான் கூறுவது பொய் என்பதனை அவருக்கு ”தேசியவீரர்”,”தேசபக்தர்”பட்டம் கொடுத்து சிங்கள பேரினவாதிகளே காட்டிக் கொடுத்து விட்டனர். அதேபோன்று”நான் புலிகளிடம் இருந்து விலகி வந்து, அவர்களை தோற்கடிக்க என் உயிரை பணயமாக வைத்து போராடினேன்”என்று உதய கம்மன்பிலவிடம் கூறி கண்ணீர் விட்டதன் மூலம் பிள்ளையானும் தான் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆகவேதான் தமிழினத்தின் உரிமைகளுக்கு போராடிய விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் காட்டிக்கொடுத்து துரோகம் செய்த பிள்ளையான் ”தேசிய வீரன்”என சிங்களவர்களினால் போற்றப்படும் நிலையில் ”பிள்ளையான் ஒரு தமிழினத் துரோகி”என தமிழர்களினால் தூற்றப்படுகின்றார். இதுதான் இலங்கையின் இரு தேசிய இனங்களுக்கிடையிலான முடிவின்றித் தொடரும் உணர்வு நிலை. இந்த இரு துருவ மனநிலைதான் இனப்பிரச்சினை தீர்வுக்கான மிகப்பெரும் தடைக்கல்