தமிழ்ச் சமூகத்தின் கலை, கலாசார நிகழ்வுகளுக்கும் நிதியுதவி
ஒன்ராறியோ மாகாணத்தில் இவ்வருடம் பல்லியனச் சமூகங்களின் கலை, கலாசார நிகழ்வுகளையும் பண்டிகை நிகழ்வுகளையும் நடத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் 20 மில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்துள்ளது. தமிழ்ச் சமூகத்தின் கலை, காரசாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்விற்கும் இதில் 55,000 டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாண அரசின் சுற்றுலாத்துறை, கலாசார அமைச்சர் ஸ்டான் ஷோ (Stan Cho) இதற்கான அறிவிப்பை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட ஸ்காபரோ வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ரேமண்ட் ஷோ (Raymond Cho), இந்த நிதியுதவி ஸ்காபரோவில் சமூகங்களின் கலை, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் ஒன்ராறியோ அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக தெரித்தார்.
அத்துடன், இந்த நிதியுதவி மூலம், கனடிய தமிழ் வானொலி நடத்தும் ‘நட்சத்திர விழா’, (Star Fest) தமிழ் மக்களின் கலை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கவும், இது பல்லின சமூகத்தைக் கொண்ட ஒன்ராறியோவை மேலும் சிறப்படையச் செய்வதற்கும் வலுசேர்ப்பதாகவும் சட்டமன்ற உறுப்பினர் ரேமண்ட் ஷோ தெரிவித்தார்.
‘நட்சத்திர விழா’வை ஏற்பாடு செய்துள்ள கனடிய தமிழ் வானொலி இரண்டாவது வருடமாக இந்த நிதியுதவியைப் பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
இதுகுறித்து கனடியத் தமிழ் வானொலியின் பணிப்பாளர் குமாரசுவாமி கருத்து தெரிவிக்கும்போது, கடந்த 25 வருடங்களாக நட்த்திர விழாவை ஸ்காபரோவில் நடத்தி வருகிறோம். இம்முறையும் இந்நிகழ்வை பிராமாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறோம். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்குகொள்ளும் இந்த நிகழ்வு இவ்வருடம் ஜூன் மாதம் 27ஆம் 28ஆம், 29ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் மக்களின் கலை, கலாசார, நிகழ்வுகளை ஊக்குவித்து ஒன்றாரியோ அரசாங்கம் வழங்கி வரும், இந்த நிதியுதவிகளுக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றிi தெரிவித்துக்கொள்கிறோம்.’’ என்றார்.
ஒன்ராறியோ முழுவதும் இவ்வருடம் சுமார் 350 நிகழ்வுகளையும், பண்டிகைக் கொண்டாட்டங்களையும் நடத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் இந்த நிதியை ஒதுக்கியுள்ளது.
சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கும், மாகாண பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் பல்லின சமூகங்களின் பாரம்பரிய, கலை, கலாசார நிகழ்வுகளை ஊக்குவிப்பதற்கும் இந்த உதவிகளை ஒன்ராறியோ அரசாங்கம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்காபரோ வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ரேமண்ட் ஷோ அலுவலகம்
416-988-9314 | raymond.cho@pc.ola.org