நீலகிரி மாவட்டம் உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை அதிபர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து, துணை அதிபர் ஜகதீப் தன்கர் பேசியதாவது: கல்வி நிறுவனங்களுக்கு சாதகமான அணுகுமுறை அவசியமானது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி அடைவது என்பது அவசியம். கல்வியால் தான் நான் துணை ஜனாதிபதி பதவிக்கு வந்துள்ளேன். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். பயங்கரவாதம் உலகளவில் அச்சுறுத்தலாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியை எந்த சூழலிலும் தடுக்க முடியாது. நாட்டின் வளர்ச்சியை வடிவமைப்பதில் பல்கலைக்கழக வேந்தர்கள் முக்கியமானவர்கள். பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் முயற்சியை பாராட்டுகிறேன். கல்வி நிலையங்களின் பிரச்சனைகளை அறிந்து அவற்றை களைவதற்கு துணை வேந்தர்கள் மாநாடு உதவும். ஆளுனராக பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட பிரமாணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தீவிரமாக கடைபிடிக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார். எவ்வித தடையும் இல்லாமல் நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
