இன்றிலிருந்து சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வீரகேசரிப் பதிப்பாக வெளிவருந்து இலட்சக் கணக்கான வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற ‘நிலக்கிளி’ நாவல் புகழ் அ. பாலமனோகரன் அவர்களின் ‘நிலக்கிளி’ ஆங்கில மொழி மூல பதிப்பு மற்றும் மிஸ்டர் மங் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா கனடாவில் சிறப்பாக நடைபெற்றது.
தற்பொழுது டென்மார்க் தேசத்தில் தனது துணைவியார் சகிதம் வாழ்ந்து வரும் புகழ்பெற்ற எழுத்தாளரும் இன்னும் தொடர்ச்சியாக எழுத்துலகில் சஞ்சரித்து வருபவருமான அ. பாலமனோகரன் அவர்களைக் கொண்டாடும் முகமாகவும் அவரைப் பாராட்டும் வகையிலும் மேற்படி விழாவை கனடாவில் வெற்றிகரமாக சேவைநோக்கோடு இயங்கிவரும் ‘வன்னிச் சங்கம் – கனடா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
‘வன்னிச் சங்கம் – கனடா அமைப்பின் தலைவர் சிவா இரத்தினசிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழா ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஶ்ரீ சத்திய சாயி பாபா வழிபாட்டு மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
பல்வேறு உரைகளை திருவாளர்கள் ஐ. சி. அம்பிகாவரன். தங்கராசா சிவபாலு. ஆர். என். லோகேந்திரலிங்கம், கலாநிதி நா. சுப்பிரமணியன், பேராதரன் பாலசிங்கம். சபா .இராஜேஸ்வரன் மற்றும் திருமதிகள் கலாநிதி பார்வதி கந்தசாமி, லலிதாமணி வரதராஜா, கலாநிதி மைதிலி தயாநிதி , கலாநிதி செல்வநாயகி ஶ்ரீதாஸ் உட்படசிலர் வழங்கினார்கள்.
மேற்படி நிகழ்வில் எழுத்தாளர் அ. பாலமனோகரன் அவர்களின் நன்றியுரை இடம்பெறுவதற்கு முன்னர் அவர் பல்வேறு அன்பர்களால் கௌரவிக்கப்பெற்றார்
அங்கு உரையாற்றிய கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எழுத்தாளர் பாலமனோகரன் அவர்களின் படைப்பாற்றல் பற்றியும் உலகின் பல நாடுகளில் அவர் கௌரவிக்கப்பெற்ற விபரங்களையும்’ வன்னிச் சங்கம் – கனடா’ வின் மனிதாபிமான சேவைகளையும் பாராட்டினார்.
செய்தி சத்தியன்