திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மரியாதை இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் என் நண்பர். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. இப்ப கூட அவர் வந்தால் பேசுவேன். ஆனால் அரசியல் ரீதியாக கருத்துகள் என்பவை நேற்று ஒரு கருத்து- இன்று ஒரு கருத்து- நாளை ஒரு கருத்து என மாறுபட்டதாக இருக்கக்கூடாது. ஒரு தெளிவான நிலையில் இருக்க வேண்டும். கூட்டணி தொடர்பான திருமாவளவனின் கருத்துகள் தெளிவற்ற நிலையில் உள்ளது. எங்களைப் பொறுத்தவரையும் சிறு துரும்பாக இருந்தாலும் அதை மதிக்கின்ற பண்பு முக்கியம். ஒரு கட்சி பெரியது, சிறியது என பார்ப்பது இல்லை. ஒரு கட்சி என்ற அடிப்படையில் நாம் உரிய மரியாதை கொடுப்போம். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மரியாதை இல்லை. திமுக கூட்டணிக் கட்சிகள், ஒரு கசப்பான மனநிலையில் உள்ளனர். இன்றைக்கு திருமாவளவன் கருத்தும் இதன் வெளிப்பாடுதான். அரசியலில் நிறைய மாற்றங்கள் வரலாம். அப்படி வரும்போது பொறுத்திருந்து பார்ப்போம். அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்பதுதான் பொதுச்செயலாளர் கருத்து. அந்த வகையில் இன்னும் பல கட்சிகள், கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. ஆகையால் காலங்களும் மாறும் காட்சிகளும் மாறும். இவ்வாறு அவர் கூறினார்.