உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக பல ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அதேபோல் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து உக்ரைன் மீதான போரை ரஷியா மேலும் தீவிரப்படுத்தியது. அதன்படி உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தை குறிவைத்து ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் அங்குள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் சிறுமி உள்பட 3 பேர் பலியாகினர். முன்னதாக வாடிகன் நகரில் நடைபெற்ற போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 15 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது போரை நிறுத்துவது தொடர்பாக அவர்கள் விவாதித்தனர். இந்த சூழ்நிலையில் உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
