காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் உடனான சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து, நாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதேபோல நாட்டின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் பதிலடிக்கு பயந்து ராணுவத்தில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 4 நாட்களில் 1,200 பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக ராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ராஜினாமா செய்தவர்கள் வீரர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் இதில் இடம்பெற்றுள்ளதாக முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.