உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேடைகளில், ஜனாதிபதியின் கீழ் உள்ள முப்படைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் வலிந்து கையகப்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வனப் பாதுகாப்புத் துறையால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களை தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
மே 6 ஆம் தேதி நடைபெறவுள்ள, உள்ளூராட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, போரின் போது கையகப்படுத்தப்பட்ட மக்களின் நிலங்களை ‘முறையான ஆய்வுக்குப் பின்னர்’ வனப் பாதுகாப்புத் துறை மீள கையளிக்கும் எனக் கூறியிருந்தார்.
“சில காணிகள் பாரம்பரிய பயிரிடப்பட்ட நிலங்கள், கூகுள் வரைபடங்களைப் பார்த்து வனப் பாதுகாப்புத் துறையால் கையகப்படுத்தப்பட்டன. அவை இந்தப் பகுதியில் பயிரிடப்பட்ட நிலங்கள். மக்களின் நிலங்கள். முறையான ஆய்வுக்குப் பின்னர் அவற்றை மீள கையளிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.”
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு வவுனியாவில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம், போரால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய ஒரு குழு, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தங்களது காணிக்கான உறுதிப்பத்திரங்களுடன் காணியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, வனத்துறை அதிகாரி ஒருவரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டதாக வெளிப்படுத்தினார்.
“தமிழ் பேசும் மக்கள் 30 வருடங்களாக இடம்பெயர்ந்து இருந்தார்கள். இப்போது அவர்கள் தங்களது காணிகளை துப்பரவு செய்யப்போனால் இந்த திணைக்களம் விடுவதில்லை. வனவளத் திணைக்களத்தினர் கல்லை போடுகிறார்கள், கைது செய்கின்றார்கள், துப்பாக்கியை காட்டுகின்றார்கள். ஆயுதங்களை கொண்டு வந்து காட்டுகிறார்கள். அண்மையில் பூவரசங்குளம் பிரதேசத்தில் அந்த மக்கள் தமது காணிகளுக்கான பத்திரங்களை காண்பித்தபோது அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டியிருக்கின்றார். அதன் பின்னர் எனக்கு அறிவித்ததும் நான் அங்கு சென்றேன். இந்த விளையாட்டு இங்கு வேண்டாம்.”
யாழ்ப்பாண மாவட்டத்தில் வன பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான 5,397 ஏக்கர் நிலத்தில், 397 ஏக்கர் நிலம் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலம் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவிக்கின்றார்.
ஏப்ரல் 26, 2025 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களின் நிலங்களிலிருந்து ‘விடுவிக்கக்கூடிய’ ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் கூறியிருந்தார்.
“பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் நிலங்கள் இராணுவ முகாம்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிவோம். அந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் தளபதிகளுடன் நாங்கள் கலந்துரையாடுவோம். விடுவிக்கக்கூடிய ஒவ்வொரு அங்குல நிலத்தையும் விடுவிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். அது சரிதானே?”
காணிகளை இழந்தவர்கள்
வடக்கில் தொடங்கப்பட்ட போரில் முன்னணியில் இருந்த முப்படையினரால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் கைப்பற்றப்பட்ட 2,500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள், போர் முடிந்து 15 வருடங்களுக்கு பின்னரும் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பது இந்த வருட ஜனவரியில் தெரியவந்தது.
அந்த நிலத்தின் பெரும்பகுதி தமிழர்களுக்குச் சொந்தமானது, அதன் உரிமையாளர்கள் இன்னும் தங்கள் வீடுகளை இழந்தது போல் வாழ்கிறார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே முப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 2624.29 ஏக்கர் நிலத்தை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் முன்வைத்த புள்ளி விபரங்களின்படி, போர் முடிவடைந்ததிலிருந்து முப்படையினரால் உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் அளவு 23,850 ஏக்கர்களாகும்.
ஜனவரி 31, 2025 அன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம், 23,850 ஏக்கர் காணியில் 21,226 ஏக்கர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
முப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீதமுள்ள 2624.29 ஏக்கர் காணியில், 951 ஏக்கர் அரசுக்கு சொந்தமானது எனவும், மீதமுள்ள 1,673 ஏக்கர், தனியார் காணி எனவும் அவர் அன்று ஜனாதிபதியிடம் மேலும் தெரிவித்திருந்தார்.
பலாலி விமானப்படை தள விரிவாக்கத்திற்காக விமானப்படையால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான 1009.7 ஏக்கர் நிலத்தை விமானப்படை ஏற்கனவே விமான ஓடுபாதைக்காகப் பயன்படுத்தி வருவதாக ஜனாதிபதியிடம் வலியுறுத்திய யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், அந்தப் பகுதியில் 643 தமிழர்களுக்குச் சொந்தமான காணி இருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஏப்ரல் 26, 2025 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கொழும்பில் உள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு முன்னால் உள்ள வீதிகள் திறக்கப்பட்டிருந்தாலும், கிளிநொச்சியில் உள்ள வீதிகள் ஏன் மூடப்பட்டுள்ளன? என, போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கேட்டிருந்தார்.
கடந்த ஒக்டோபரில் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதியை திறக்க உத்தரவிட்ட புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, வடக்கில் அதையே ஏன் செய்யவில்லை என தமிழ் அரசியல் ஆர்வலர்கள் அப்போது கேள்வி எழுப்பியிருந்தனர்.
“மேலும் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள கொழும்பு வீதி திறக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள கொழும்பு வீதி திறக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள வீதிகள் ஏன் மூடப்பட்டுள்ளன? மக்கள் பயணிக்கும் வகையில் அந்த வீதிகள் அனைத்தையும் நாங்கள் மீண்டும் திறப்போம்,” என குறிப்பிட்ட ஜனாதிபதி, தனது அரசாங்கம் ஏற்கனவே வடக்கில் வீதிகளை திறந்துள்ள விடயத்தையும் வலியுறுத்தினார்.
“யாழ்ப்பாணத்தின் வடக்கில் ஏற்கனவே ஏராளமான வீதிகள் மீண்டும் திறந்துள்ளோம்.”
யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட வீதிக்கு கடும் நிபந்தனைகள்
எவ்வாறெனினும், வடக்கில் இடம்பெற்ற போர் காரணமாக 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த வசாவிளான்-பலாலி வீதி மீண்டும் திறக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதிகளுக்கு விதிக்கப்படாத கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, ஏப்ரல் 10 ஆம் திகதி காலை இந்த வீதி மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த வீதி உயர் பாதுகாப்பு வலையம் மற்றும் இராணுவ குடியிருப்புகள் வழியாகச் செல்வதால், வீதியை பயன்படுத்துவது குறித்த விதிகளைக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகை நிறுவப்பட்டுள்ளது, மேலும், எந்தவொரு அதிகாரியின் பெயரும் குறிப்பிடப்படாமல், விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மாத்திரமே பொதுமக்களுக்கு திறந்திருக்கும் இந்த வீதியில் பயணிக்கும் பயணிகள் மற்றும் சாரதிகள், எந்த நேரத்திலும் பாதுகாப்புப் படையினரிடம் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.
அந்த வீதியில் எல்லா நேரங்களிலும் நடந்து செல்வதோ அல்லது துவிச்சக்கர வண்டியில் செல்வதோ தடைசெய்யப்பட்டுள்ளதோடு பயணிகள் பேருந்துகளைத் தவிர வேறு எந்த கனரக வாகனங்களிலும் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், வீதியில் வாகன நிறுத்துமிடமோ அல்லது திருப்பங்களோ இல்லை.
இந்த வீதியில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் எனவும் வீதியில் நின்று புகைப்படம் எடுப்பது அல்லது காணொளி பதிவு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.