பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் பல தசாப்தங்களாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து ஆதரவு அளிப்பதாக அண்மையில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில், இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் கூறியதாவது: பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளித்து ஆதரித்ததாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அவரது இந்த பேச்சு யாருக்கும் ஆச்சர்யம் கொடுக்கவில்லை. உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு பாகிஸ்தான் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்ததை ஒப்புக்கொண்டதை உலகம் முழுவதும் மக்கள் கேட்டனர். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதம் எல்லா வகையிலும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்றார்.
