மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்ககொடி மரம் பல வண்ண மலர்கள், மக்காச்சோளம் உள்ளிட்ட நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணியளவில் பிரியாவிடையுடன் சுந்தரே சுவரரும், மீனாட்சி அம்மனும் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து 10.30 மணி முதல் 10.59 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி-அம்பாள் முன்னிலையில் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 8-ந்தேதி விமரிசையாக நடைபெறுகிறது.
