சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயோத்தி, கருடன், நந்தன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. அதனை தொடர்ந்து தற்போது சசிகுமார் ‘டூரிஸ்ட் பேமலி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘குட் நைட்’ படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடிக்கிறார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் முதல்காட்சி பதாகை வெளியாகி வைரலானது. இந்த படத்தின் முன்னோட்டத்தில் சசிகுமார் – சிம்ரன் பேசும் இலங்கை தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் சசிகுமார், குற்றப்பரம்பரை நாவலைத் தழுவி வெப் தொடர் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இந்த வெப் தொடர் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இதற்கிடையில் நடிகர் சசிகுமார் சூர்யாவின் நடிப்பில் பீரியட் படம் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் அந்த கதையை விஜய்யிடம் கூறி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் இது தொடர்பாக சசிகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சசிகுமார், “இன்னும் அந்த கதை இருக்கிறது. அதற்கு சரியான கதாநாயகனை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக நான் இன்னொரு பீரியட் படத்தை எடுக்கப் போகிறேன். அதன் படப்பிடிப்பை 2026-ல் தொடங்குவேன். அதில் ஒரு கேரக்டரில் நானும் நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். எனவே சசிகுமார் இயக்கவுள்ள இந்த பீரியட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. இனிவரும் நாட்களில் மற்ற பதிவேற்றங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
