தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக விதிகளின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரே, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆவார். இதன்படி, பின்வரும் தோழர்களை, கழகத் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்கிறேன். உறுப்பினர் 1. திரு. என். ஆனந்த் கழகப் பொதுச் செயலாளர்.
உறுப்பினர் 2. திருமதி சி.விஜயலட்சுமி, மாநிலச் செயலாளர், உறுப்பினர் சேர்க்கை அணி, இக்குழுவானது. கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள். குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்குழுவிற்குக் கழக நிர்வாகிகளும் தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கழக நிர்வாக வசதிக்காகத் தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்கள் வடக்கு. மேற்கு தெற்கு மற்றும் மத்திய / கிழக்கு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த நான்கு மண்டலங்களில் உள்ள வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட கழக மாவட்டங்களுக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன.