காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன. இந்த சூழலில், இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ இன்னும் ஓரிரு தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச உள்ளார். இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெளியுறவுத்துறை மட்டுமின்றி, பல்வேறு அளவுகளிலும் இருநாட்டு அரசுகளிடம் பேச உள்ளோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.