சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார். அதேவேளை, முன்னாள் அதிபர் அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிரியா அரசுப்படைகள் மீதும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், சிரியாவின் டமாஸ்கஸ் மாகாணம் ஜரமனா பகுதியில் சன்னி பிரிவினருக்கும், டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு இடையேயான மோதலால் அப்பகுதியில் தொடந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
