அண்மையில் ஒரு கடையில் உப்பு கேட்ட பொழுது ஒரு பாக்கெட் மட்டும்தான் கிடைக்கும் என்று கடைக்காரர் சொன்னார். ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு பாக்கெட். அந்த அளவுக்கு உப்பு தட்டுப்பாடாகிவிட்டது. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. ஆனால் இலங்கை கடலால் சூழப்பட்ட ஒரு தீவு. சுத்திவர உப்புக்கடல்.
அதே சமயம் அரசாங்கம் 16 ஆண்டுகளின் பின் தலதா மாளிகையில் உள்ள புனித தந்த தாதுவை பொதுமக்கள் தரிசிப்பதற்கு திறந்து விட்டது.புனித தந்த தாதுவை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் கண்டி மாநகரின் தெருக்களில் திரண்டார்கள். நாட்கணக்காக வரிசைகளில் காத்திருந்தார்கள். ஏறக்குறைய சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரத் தடை மோசமாக இருந்த ஒரு காலகட்டத்தில், எரிபொருளுக்காக வரிசையில் நின்றதுபோல லட்சக்கணக்கான சிங்கள பௌத்தர்கள் வரிசைகளில் நின்றார்கள். அவர்களுடைய சுகாதாரத் தேவைகளையும் உணவு மற்றும் தங்குமிடத் தேவைகளையும் எதிர்கொள்வதற்கு கண்டி மாநகர நிர்வாகத்தால் முடியவில்லை. ஏன் அரசாங்கத்தாலேயே முடியவில்லை. கண்டி மாநகரின் இடப் பரப்பளவினால் தாங்க முடியாத ஒரு சனத்தொகை. எல்லா இடங்களிலும் குப்பைகள். பெரும்பாலான தெருக்களில் மல நாற்றம். சிறுநீர் நாற்றம். ஒரு பண்பாட்டுத் தலைநகரம் குப்பைக் கூடை போலாகியது. புனித தந்த தாதுவைக் காட்டப் போய் குப்பை கொட்டியதுதான் விளைவா?
அரசாங்கம் அதனை ஒரு தேர்தல் காலத்தில் செய்தமை என்பது தேர்தல் நோக்கங்களைக் கொண்டதுதான் என்று எனது நண்பர் ஒருவர் சொன்னார். சிங்கள பௌத்த கூட்டு உளவியலை கவர்வதற்காக அரசாங்கம் ஒரு பொருத்தமான நேரத்தில் அவ்வாறு புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சிங்கள மக்களை அனுமதித்திருக்கிறது என்றும் அவர் சொன்னார்.
ஏற்கனவே இந்த அரசாங்கம் சிங்கள பௌத்த பொது உளவியலைக் கைப்பற்றியதின் விளைவாகத்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது. அதைத் தொடர்ந்தும் தக்க வைப்பதற்காக இவ்வாறு தந்த தாதுவை பொதுமக்கள் தரிசிப்பதற்குத் திறந்து விட்டார்களோ தெரியவில்லை.
ஓர் அரசாங்கம் என்ற அடிப்படையில் அவர்கள் தங்களுக்குள்ள அரச வளங்கள், அனுகூலங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, மறைமுகமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு உபயோகிக்கின்றார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு.
தென்பகுதி மக்களைக் கவர்வதற்கு புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு அனுமதித்தது போல,தமிழ்ப் பகுதிகளில் தனது வெற்றிகளை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்தி வருகிறது. கூட்டங்களில் ஜனாதிபதி,பிரதமர் உட்பட அரச பிரதானிகள் உரையாற்றி வருகிறார்கள்.
தமிழ்க் கட்சிகளில், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிறீதரன் ஒருவரைத் தவிர வேறு யாரும் இதுவரை அவ்வாறான பெருங்கூட்டங்களை ஒழுங்குப்படுத்தியிருக்கவில்லை. இது ஏறக்குறைய கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காணப்பட்ட ஒரு நிலைமை. தமிழ்க் கட்சிகளிடம் போதிய அளவு நிதி இல்லை என்பதனால் அவர்கள் அவ்வாறு பெரிய பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்த முடியவில்லை என்று ஒரு காரணம் கூறப்படுகிறது. தமிழ்க் கட்சிகள் இதுவரையிலும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்களைத்தான் ஒழுங்குபடுத்தி வருகின்றன. பெரிய பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்தவில்லை.
பெரிய பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதாக இருந்தால் அதற்கு வேண்டிய லட்சக்கணக்கான ரூபாய்களை புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்துதான் திரட்ட வேண்டியுள்ளது என்றும், தொடர்ச்சியாக தேர்தல்கள் நடந்து வரும் காரணத்தால் அவ்வாறு திரட்டுவதற்கு தமிழ் கட்சிகளால் முடியவில்லை என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. அந்தக் காரணம் சரியாக இருந்தால் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. தமிழ்க் கட்சிகளிடம் கட்சி நிதி என்று அழைக்கக்கூடிய பொது நிதி கிடையாதா? அப்படி இருந்தால் அந்த நிதியை அவர்கள் எப்படி வசூலிக்கிறார்கள்? பொது நிதி இல்லை என்றால் கட்சிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை எப்படித் திட்டமிடுகிறார்கள்? எல்லாவற்றிற்கும் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகளில் தங்கியிருக்கிறார்களா ?
கட்சிகளும் சரி, செயற்பாட்டாளர்களும் சரி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்றால் அதற்கு முதலில் ஒரு பட்ஜெட்டைப் போட வேண்டும். அந்த நிதியை எங்கிருந்து திரட்டுவது, எவ்வளவு காலத்துக்குள் திரட்டுவது, என்று திட்டமிட வேண்டும். ஒரு பொதுவான நிதிக் கையிருப்பு இருந்தால்தான் தேர்தல் நடவடிக்கைகளை மட்டுமல்ல கட்சிகளின் எல்லா நடவடிக்கைகளையுமே திட்டமிடலாம்.
இதுதான் நிலைமை என்றால், இந்தக் கட்சிகள் எப்படித் தமிழ் மக்களின் இறுதி இலக்கை வென்றெடுக்கப் போகின்றன? ஏனென்றால் எந்த ஒரு அரசியல் நடவடிக்கைக்கும் முதலில் நிதித் திட்டமிடல் இருக்க வேண்டும். நிதித் திட்டமிடல் இல்லாமல் காற்றைக் குடித்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது. முழு நேரச் செயல்பாட்டாளர்களுக்கு ஏதோ ஒரு தொகை சம்பளம் வேண்டும். பகுதி நேரச் செயற்பாட்டாளர்களை வைத்துக்கொண்டு கட்சியைக் கட்ட முடியாது. அரசியல் செய்ய முடியாது. எந்த ஒரு கட்சியிடம் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் அதிகமாக இருக்கிறார்களோ, அந்தக் கட்சிதான் வினைத்திறன் மிக்கதாக இருக்கும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரங்கில் தமிழ்க் கட்சிகள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்களைத்தான் பெருமளவுக்கு ஒழுங்குபடுத்தி வருகின்றன. அவற்றுக்கும் ஒரு நிதி வேண்டும். அந்த நிதியை அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள்? புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்தா? அல்லது வேறு விதங்களிலா?
எதுவாயினும், தேர்தல் களத்தில் அரசாங்கம்தான் ஒப்பீட்டளவில் பெரிய பொதுக்கூட்டங்களை ஒடுங்குபடுத்தி வருகின்றது. இந்தக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினரை பஸ்களை விட்டு அரசாங்கம் ஏற்றிக்கொண்டு வருகிறது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதுமட்டுமல்ல, இவ்வாறான பொதுக் கூட்டங்களுக்கு ஜனாதிபதி அனுர வரும் பொழுது அவருடன் கைகளைக் குலுக்குவதற்கு தமிழ்ப் பெண்களும் ஆண்களும் முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். அவரோடு சேர்ந்து தன் படம் எடுப்பதற்குத் தவிக்கிறார்கள். அரசாங்கத்தின் டிஜிட்டல் ப்ரமோஷனுக்கான அணி அந்தக் காட்சிகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் கிட்டு பூங்கா கூட்டத்திலும் சரி வவுனியாவில் நடந்த பொதுக் கூட்டத்திலும் சரி அனுரவை நோக்கி கைகளை குலுக்குவதற்காக ஆண்களும் பெண்களும் முண்டியடிக்கிறார்கள். அவர்கள் அனுரவின் அரசியலை விளங்கி அதைச் செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒரு பிரமுகரோடு, அதிகாரத்தில் இருப்பவரோடு கைகளைக் குலுக்கிக் கொள்வது, ஒன்றாக நின்று தன்படம் எடுப்பது, அந்தப் படத்தைப் பின்னர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து அதற்குக் கிடைக்கும் லைக்குகளை ரசிப்பது..
இது சுயமோகம். செல்ஃபி, அதாவது தன் படம் எடுப்பதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியோடும் கைபேசிச் செயலிகள், சமூகவலைத்தளங்களின் பெருக்கத்தோடும் மனிதர்களின் சுயமோகம் ஒரு வருத்தம் என்ற வளர்ச்சிக்குக் கிட்ட வந்து விட்டது. அதுபோலவே குறிப்பாக யு ரியுப்களின் பெருக்கத்தோடு பொதுப் புத்திக்கும் அதாவது ஜனரஞ்சகத்துக்கும் அறிவிற்கும் இடையிலான இடைவெளி முன்னப்பொழுதையும் விட ஆழமாகிவிட்டது. இப்படிப்பட்டதோர் தொழில்நுட்பம்சார் உளவியல் பின்னணியில்,அனுரவை நோக்கி நூற்றுக்கணக்கான கைகள் கைகுலுக்க நீள்கின்றன.
இது தற்செயலானதா அல்லது திட்டமிட்டு அரங்கேற்றப்படும் நாடகமா என்ற ஆராய்ச்சிகளுக்குமப்பால் ஜனாதிபதி சாதாரணமானவர், சாதாரண மக்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடியவர், தொட்டுப் பழகக் கூடியவர்… என்ற ஒரு பிம்பம் ஏற்கனவே ஸ்தாபிதமாகிவிட்டது. அதாவது அனுரவுக்கு ஒரு கதாநாயக அந்தஸ்து உண்டு.இந்த இடத்தில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை நோக்கி ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான கதாநாயக பிம்பங்கள் ஏன் இல்லாமல் போயின? தமிழ்த்தேசிய அரசியல் அரங்கில் உள்ள கட்சித் தலைவர்களுக்கோ அல்லது செயற்பாட்டாளர்களுக்கோ அவ்வாறான கவர்ச்சி ஏன் இல்லாமல் போனது?
இவ்வாறு பொதுக் கூட்டங்களில் அனுரவைக் காண்பதற்கும் அவரோடு கைகுலுக்குவதற்கும் தன் படம் எடுப்பதற்கும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் முண்டியடிக்கும் ஒரு தேர்தல் போட்டிக் களத்தில், தேசிய மக்கள் சக்தியானது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிகளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் உறுதிப்படுத்தக் கூடுமா என்ற சந்தேகம் அதிகமாக உண்டு.
யாழ். மாநகர சபைக்கான தேர்தல் களத்தில் மணிவண்ணனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தால் அவர் போட்டி களத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். ஒரு பிரதான போட்டியாளர் அவ்வாறு அகற்றப்பட்டிருப்பது ஏனைய கட்சிகளுக்கு அதிகம் வாய்ப்பானது. அங்கே அரசாங்கத்தின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் ஒரு குழந்தை முகத்தோடு காட்சியளிக்கிறார். அவர் பொருளாதார ரீதியாக நகரத் திட்டமிடல் தொடர்பில் தனக்குள்ள பாண்டியத்தை நிரூபிக்கும் விதத்தில் அறிக்கைகளை விடுகிறார். படித்த யாழ்ப்பாணத்தவர்கள் மத்தியில் அவரை நோக்கிய எதிர்பார்ப்பு உண்டு. மணிவண்ணன் போட்டிக்களத்தில் இல்லாத ஒரு பின்னணியில், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டா?
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் உள்ளூர் நிலைமைகளுக்கானவை என்று எல்லாரும் கூறிக்கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் அது தமிழ்த் தேசியத்திற்கும் சிங்கள பௌத்த பெருந் தேசியத்துக்கும் இடையிலான ஒரு மோதல் களமாகவே காணப்படுகிறது. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றன. அரசாங்கத்தை அதிலும் குறிப்பாக அரசாங்கத்தின் அடித்தளமாக இருக்கும் ஜேவிபியை எப்படி அம்பலப்படுத்துவது என்பதுதான் அவர்களுடைய பிரதான பிரச்சார உத்தியாக உள்ளது.
அது சரி. ஆனால் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பிரச்சாரம் செய்வதனால் மட்டும் அதனை தோற்கடித்து விட முடியாது. நடைமுறையில் அதை தோற்கடிப்பதற்கான வியூகம் என்பது ஐக்கியம்தான். அதுதான் தமிழ் கட்சிகளிடம் இல்லையே?
அரங்கில் இப்பொழுது நான்கு தமிழ்த் தேசியத் தரப்புகள் உண்டு. தமிழரசுக் கட்சி, முன்னணியின் தமிழ்த் தேசியப் பேரவை, விக்னேஸ்வரனின் கட்சி, சங்குக் கூட்டணி ஆகியவையே அந்த நான்கும். இந்த நான்கும் ஒரே குரலில் தேசிய மக்கள் சக்தியை எதிர்க்கின்றன. ஆனால் அதேசமயம் தங்களுக்கு இடையேயும் ஒருவர் மற்றவரைத் தாக்கி வருகின்றன. “நாங்கள் தான் பெரிய கட்சி, மற்றவை உதிரிக் கட்சிகள்” என்று கூறும் சுமந்திரன் “நாங்கள் ஏனைய கட்சிகளை விமர்சிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்” என்று கூறுகிறார். ஆனால் நடைமுறையில் உள்ளூரில் ஏனைய கட்சிகளுக்கு எதிராகத்தான் பிரச்சாரம் நடக்கின்றது.
ஏன் அதிகம் போவான்? சுமந்திரன் செயலாளராக இருக்கும் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்குக் கிடைக்கும் வெற்றி சுமந்திரனையும் சேரும் என்பதனால் இந்த வெற்றியின் மூலம் மறைமுகமாக சுமந்திரனையும் பலப்படுத்தி விடுவோமா என்ற பயம் பல வேட்பாளர்களிடம் உண்டு. அண்மையில் ஒரு பெண் வேட்பாளர் அவ்வாறு கேட்டதாக சிறீதரன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் வைத்துக் கூறியுள்ளார்.
இப்படித்தான் இருக்கிறது தமிழ் கட்சிகளுக்கு இடையிலான போட்டி நிலவரம். இது தேசிய மக்கள் சக்திக்கு அனுகூலமானது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்த எதிர்பாராத வெற்றி என்பது தமிழ் ஐக்கியமின்மையின் விளைவாகவே கிடைத்தது. அந்த ஐக்கியமின்மை இப்பொழுதும் உண்டு.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையானது ஒரு புதிய ஐக்கிய முயற்சி. ஆனால் அது பிரமாண்டமானது அல்ல.
இப்பொழுதும் தமிழரசுக் கட்சிக்குத்தான் ஒப்பீட்டளவில் வெற்றி வாய்ப்புகள் அதிகம். தமிழரசுக் கட்சி தோற்கடிக்கப்படுமாக இருந்தால் அந்த இடத்தை இட்டு நிரப்பும் கொள்ளளவோடு, தயாரிப்புகளோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இல்லை. நான்கு தமிழ்த் தேசியத் தரப்புகளில் யார் வென்றாலும் அது தேசிய மக்கள் சக்திக்குத் தோல்விதான்.ஆனால் இங்குள்ள நிச்சயமின்மை என்னவென்றால், யார் தோற்றாலும் அந்த வெற்றி வாய்ப்பு ஏனைய மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் போகாமல் தேசிய மக்கள் சக்திக்குப் போகக் கூடுமா என்பதுதான்.