உழைப்பாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மே தின பூங்கா நினைவு சின்னத்தில் உள்ள தூணுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். செஞ்சட்டை அணிந்து வந்து மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மே 1-ம் நாள் தொழிலாளர் தினமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம். உருண்டோடுகின்ற ரெயிலை ஓட்டக்கூடியவர் ஒரு தொழிலாளி தான். இழையை நூற்று நல்லாடையை நெய்பவரும் தொழிலாளி தான். இரும்பு காய்ச்சி உருக்குபவனும் தொழிலாளி தான். கடலில் மூழ்கி முத்து எடுப்பவனும் தொழிலாளி தான். உழுது நன்செய் பயிரிடுபவரும் தொழிலாளி தான். அந்த தொழிலாளர்களுடைய இனம் வகுந்து கொண்டாடக்கூடிய திருநாள் தான் மே தினம் என்று அறிஞர் அண்ணா சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். தொழிலாளர் தோழர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே நாளில் உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார். மே தின பூங்காவை உருவாக்கித்தந்தவர் கலைஞர். ஒட்டுமொத்த நாடும் சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதே நோக்கம். தொழிலாளர் தோழர்களுக்காக உழைக்கும் திராவிட மாடல் அரசுக்கு பக்கபலமாக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
