வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 14.35 கோடி பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக உள்ளனர்.
இதனிடையே, இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்து இருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2024-25ம் ஆண்டுக்கான நிலுவைத்தொகை ரூ.1,246 கோடி மீதித்தொகையை மத்திய அரசு வழங்கும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.