தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், இனிய நந்தவனம் இதழ் மற்றும் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் ‘தமிழ் ஹைக்கூ; நான்காவது உலக மாநாடு’ வரும் 2025 மே 11 அன்று இலங்கையிலுள்ள கொழும்புத் தமிழ்ச் சங்க அரங்கில் ஒரு முழு நாள் விழாவாக நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் மே 1 அன்று திருச்சி கல்லுக்குழி புனித அந்தோணியார் தேவாலய அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ‘தமிழ் ஹைக்கூ; நான்காவது உலக மாநாட்டு’ப் பதாகையை புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சீனு.ராமசாமி வெளியிட, கவிஞரும் பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினருமான கவிஞர் தங்கம் மூர்தேதி பெற்றுக்கொண்டார். நிகழ்வில், கல்வியாளர் செளமா ராஜேந்திரன், மாநாட்டு ஆலோசகர் கவிஞர் மு.முருகேஷ், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் நந்தவனம் சந்திரசேகரன், கம்பம் பாரதன், வதிலை பிரபா, அவனி ச.மாடசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டின் தொடக்க விழாவுக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகரும், இலக்கியப் புரவலருமான அ.ஹாசிம் உமர் தலைமையேற்கிறார். ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை வரவேற்புரையாற்றுகிறார்.
கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா, ‘தினகரன்’ வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், ‘வீரகேசரி’ நாளிதழ் ஆசிரியர் ஸ்ரீகஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.
ஹைக்கூ கவியரங்கம், கருத்தரங்கம், அனுபவப் பகிர்வரங்கம், மாநாட்டு சிறப்பு மலர் வெளியீடு, ஹைக்கூ கவிதை நூல்கள் வெளியீடு ஆகிய நிகழ்வுகளில் தமிழகம், புதுச்சேரி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களும் ஆய்வாளர்களும் பங்கேற்கவுள்ளார்கள்.
1988-ஆம் ஆண்டிலேயே இலங்கையின் முதல் ஹைக்கூ நூலை எழுதிய கவிஞர் சு.முரளிதரனுக்கு ‘ஹைக்கூ பேரொளி’ எனும் விருது வழங்கி கவுரவிக்கப்படவுள்ளார்.
இம்மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கவிஞரும் பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினருமான கவிஞர் தங்கம் மூர்த்தி, சக்தி கார்ஸ் உரிமையாளரும் திரைப்படப் பாடலாசிரியருமான கவிமுகில், பால சாகித்திய புரஸ்கார் விருதாளரும் கவிஞருமான மு.முருகேஷ், ‘இனிய நந்தவனம்’ இதழாசிரியரும் கவிஞருமான நந்தவனம் சந்திரசேகரன், பேராசிரியர் முனைவர் மு.செந்தில்குமார், கவிஞர்கள் ப.சொக்கலிங்கம், பா.தென்றல், அன்புத்தோழி ஜெயஸ்ரீ உள்ளிட்ட குழுவினர் பலரும் பங்கேற்க இருக்கிறார்கள்.
2022-ஆம் ஆண்டில் தமிழ் ஹைக்கூ முதலாவது மாநாடு திருச்சியிலும், 2023-இல் இரண்டாவது மாநாடு அந்தமானிலும், 2024-இல் மூன்றாவது மாநாடு மதுரையிலும் நடைபெற்ற நிலையில் தற்போது நான்காவது மாநாடு இலங்கையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
படக்குறிப்பு:
திருச்சியில் நடைபெற்ற ஹைக்கூ மாநாட்டுப் பயண ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள ‘தமிழ் ஹைக்கூ; நான்காவது உலக மாநாட்டு’ப் பதாகையை புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சீனு.ராமசாமி வெளியிட, கவிஞரும் பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினருமான கவிஞர் தங்கம் மூர்தேதி பெற்றுக்கொண்டார். அருகில், கல்வியாளர் செளமா ராஜேந்திரன், மாநாட்டு ஆலோசகர் கவிஞர் மு.முருகேஷ், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோர் உடன் உள்ளனர்.