2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 30.04.2025) அன்று புதன்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டு 131.20 மில்லியன் ரூபா நிதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை உரிய காலத்திற்குள் நிறைவேற்றி முடிக்குமாறும், திட்டங்கள் நிலைத்திருக்கக்கூடிய வகை அமைந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், திட்டங்களை அமுல்படுத்திய பின்னர் அதனை சரியான முறையில் பாராமரிக்கும் பொறிமுறையினையும் பேண வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், காரைநகர், தெல்லிப்பளை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான அரசாங்க அதிபரால் பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டது.
1.தெல்லிப்பளை – கீரிமலை கடற்கரை பகுதியில், பிதிர்க்கடன் நிறைவேற்றும் செயற்பாட்டிற்கு இடையூறாக உள்ள கற்களை அகற்றி பாதுகாப்பான முறையில் பிதிர்க்கடன் மேற்கொள்வதற்கான பொருத்தமான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் குறிப்பாக கடற்கரையில் காணப்படும் கற்களை அகற்றி கடற்கரையினை சீர் செய்வதற்காக அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக ரூபா. 35.00 மில்லியன் நிதி ஒதுக்கீடு அமைச்சால் விடுவிக்கப்பட்டுள்ளதால் – அத் திட்டத்தினை சிறப்பாகவும் விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உரிய அறிவுத்தல்கள் வழங்கப்பட்டது. மேலும், காங்கேசன்துறை கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா வின் பகுதி கடுமையான கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு சிறுவர் பூங்கா விற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் அவ் விடத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதனாலும் அதனை புனரமைப்புச் செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
2.காரைநகர் கசூரீனா கடற்கரையினை சிறந்த வசதிகள் கொண்ட கடற்கரையாக மாற்றுவதற்கு ஒதுக்கிடப்பட்ட நிதிக்கு அமைய, நேரடியாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து களவிஜயம் செய்து அபிவிருத்தி திட்டங்களை ஆராய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
3.தீவக சுற்றுலாவினை மேம்படுத்தும் வகையில், ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாக குறிப்பாக அனலைதீவிலுள்ள புளியன்தீவு படகுத்துறை, ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் படகுத்துறை புனரமைப்பு செய்வது தொடர்பாகவும், ஊர்காவற்றுறை படகுத் துறைப் பகுதியில் மரம் நாட்டி சுற்றுலாப் பயணிகள் இருக்கதக்க வகையில் இருக்கைகள் அமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் நேரடியாக களவிஜயம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், தெல்லிப்பளை, காரைநகர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.