உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை வெளியிட்டு அறிக்கை
யாழ்ப்பாணம் நல்லையம்பதியில் குடிகொண்டுள்ள கந்தப்பெருமானின் அருகாமையில் அவரை அரணாகக் கொண்டு, நீண்ட காலமாக நல்லை ஆதின முதல்வராக நற்பணி ஆற்றி வந்த ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் மறைவினால் வட இலங்கை வாழ் சைவப்பெருமக்கள் ஆன்மீக பலம் கொண்ட வழிகாட்டியை இழந்தவர்களாக தவிக்கின்றனர்.
அத்துடன் வெளிநாடுகளிலிருந்து வருகின்ற அரசியல் மற்றும் சேவை நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமிழர்களின் ஆன்மீக நம்பிக்கைகளையும் பண்பாட்டுக் கோலங்களையும் இனிதான மொழியில் எடுத்துரைத்து வந்த வட இலங்கைத் தமிழர்களின் ஆன்மீகத் தலைவரான ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் இழப்பு ஒரு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை வெளியிட்டுள்ள இரங்கல் தெரிவிக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் மறைவு தொடர்பாக கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்கள் தனது அனுதாபச் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“இலங்கையெங்கும் வாழ்கின்ற சைவப் பெருமக்களுக்கு மாத்திரமல்ல அனைத்து தமிழ் மக்களும் போற்றியும் மதித்தும் வந்த சைவப் பீடமொன்றின் தலைவராக விளங்கிய ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் அவர்கள் எமது தாயகத்தில் கடந்த போர்க் காலங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களுக்காக பிராத்தனைகள் செய்வதையும் அவர்களின் உளக் காயங்களின் வலிகளை தணிக்கும் ஒரு ஆன்மீக வைத்தியராகவும் விளங்கியவர். அவரது தங்கியிருந்த ஆதினத்தில் என்னைப் பாராட்டும் வைபவத்தை தலைமை தாங்கி நடத்தி புலம் பெயர் தமிழர்களின் பணிகளையும் பாராட்டுவதில் உள்ள அக்கறையையும் அன்பையும் வெளிக்காட்டியவர்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் வெளிநாட்டுத் தூதுவர்கள் கூட மறைந்த ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளையும் சந்தித்து ஆசிபெற்று அவரது உள்ளக்கிடக்கைகளாக வெளிவருகின்ற எமது மக்களின் துயரங்களின் பதிவுகளை செவிமடுத்துச் செல்லும் ஒரு தூதுவராகவும் விளங்கியவர்.
இவ்வாறான பன்முக ஆளுமையும் அன்பைவெளிக்காட்டும் பக்குவமும் கொண்ட ஒரு முதல்வர் எம் மக்கள் மத்தியில் ஒரு ‘முத்தாக’ விளங்கியவர். அவரது மறைவையொட்டி உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கும் எமது இயக்கத்தின் சார்பிலும் கிளைத் தலைவர்களின் சார்பிலும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”
இவ்வாறு மேற்படி அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.