காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள், 1 உள்ளூர் குதிரை ஓட்டி உயிர் இழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலும் துண்டித்து உள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே போல பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து ஐ. நா. பாது காப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடந்தது. இக்கூட்டம் திறந்த ஆலோசனையாக இல்லாமல் மூடிய அறையில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் தங்களது கருத்துக்களை தெரிவித்தன. இக்கூட்டம் சுமார் 1½ மணி நேரம் நடந்தது. இதில் சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது குறித்து பாகிஸ்தான் பிரச் சினையை எழுப்பியது. இந்த கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. அறிக்கையோ தீர்மானமோ என எந்த ஒரு விஷயமும் எடுத்துக்கொள் ளாமல் கூட்டம் நிறைவு பெற்றது. இதன் மூலம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது. பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தொடர்பு குறித்து பாகிஸ்தானிடம் கேள்வி கேட்டனர். மேலும் பாகிஸ்தானின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள் மற்றும் அணு ஆயுதப் பேச்சுக்கள் குறித்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.
இது பதற்றமான நிலைமையை அதிகரித்ததாக கருத்துக்களை தெரிவித்தனர்.இந்தப் பிரச்சினையை இந்தியாவுடன் இருதரப்பு ரீதியாக நாடுமாறு பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியது. பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் அழைப்பு விடுத்தனர். முன்னதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெ ரெஸ் கூறும்போது, “எந்த காரணத்துக்காகவும் பொது மக்களின் மீதான பயங்கரவாத தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. சமீபத்திய பிரச்சினையால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. பிரச்சினைகளுக்கு ராணுவம் மூலம் தீர்வு ஏற்படாது. எனவே இருநாடுகளும் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும். எந்த தவறும் செய்யாதீர்கள். ராணுவத்தீர்வு ஒரு தீர்வாகாது” என்றார்.