மறைந்த நல்ல ஆதின முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிற்கான அஞ்சலி நிகழ்வில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் புகழாரம்
“ஈழத்தில் வாழும் சைவப் பெருமக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த தமிழர்களுக்குமான ஒரு அடையாளமாகவும் அதிகாரமாகவும் விளங்குகின்ற நல்லை ஆதினத்தை இதய சுத்தியுடன் பரிபாலனம் செய்தவர் இறைபதம் அடைந்த சுவாமிகள் அவர்கள். அன்னாரது பணிக்காலத்தில் நல்லை ஆதினத்தை மக்கள் ஒரு மத பீடமாக மாத்திரம் பார்க்காமல் அதனை ஒரு சமூக பணியாற்றும் ஒரு உயர் பீடமாகவும் கணித்து வந்தார்கள்”
இவ்வாறு. மறைந்த நல்லை ஆதின முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிற்காக கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் புகழாரம் சூட்டினார்.
மேற்படி அஞ்சலி நிகழ்வு கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. அதனை திருவாளர்கள் ஞானசெல்வம் மற்றும் கேதா நடராஜா உட்பட பலர் இரணந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
மேற்படி அஞ்சலி நிகழ்வினை சிவஶ்ரீ கோபி கிருஸ்ணா சர்மா தொகுத்து வழங்கினார்.
அங்கு உரையாற்றிய லோகேந்திரலிங்கம் தொடர்ந்து தனது உரையில் “யாழ்ப்பாணத்தின் ராஜதானியாக விளங்கிய நல்லூரில் இயங்கிவந்த நல்லை ஆதின முதல்வர்களை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் வெளிநாட்டுத் தூதுவர்கள் தவறாது சந்தித்துச் செல்வது ஒரு சம்பிரதாயமாகவும் ஒழுங்காகவும் மரபாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இறைபதம் அடைந்த எமது சுவாமிகள் அவர்கள் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் எமது தமிழ் மக்களின் வலிகளைப் பகிர்ந்து கொள்ளத் தவறுவதில்லை. அவ்வாறு தனது சமயக் கடமைகளையும் சமூகக் கடமைகளையும் ஆற்றுவதில் வலலவராக இருந்தார் எமது மறைந்த நல்லை ஆதின முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள்’ என்று குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய அனைவரும் நல்லை ஆதினத்தின் பணிகளையும் மறைந்த நல்லை ஆதின முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் அர்ப்பணிப்புக்களையும் எடுத்துரைத்தனர். அவர் தனத உடல்நலத்தைக் கூட கவனிக்காமால் இன்னும் பல ஆண்டுகள் பணி செய்யக்கூடிய வயதும் வாய்ப்புக்களும் நிறைந்திருந்தாலும் அவரை நாம் இழக்க வேண்டிய காலம் அவரை மறைத்து விட்டது” என்று குறிப்பிட்டார்கள்