அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் இறந்த அசங்க இந்துனிலின் ‘மண்டை ஓடு சேதமடைந்திருந்தது’
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த நபரின் மரணம் தாக்குதலினால் ஏற்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்த அசங்க இந்துனிலின் உறவினர்கள், அவருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது மண்டை ஓடு சேதமடைந்திருந்ததை வைத்தியசாலை ஊடாக அறிந்துகொண்டுள்ளதாக கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் நாட்டின் முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது.
சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் நிர்வாக பணிப்பாளர் சடடத்தரணி சேனக பெரேராவின் கூற்றுக்கு அமைய, 45 வயது ஜயசேகர ஆராச்சிகே அசங்க இந்துனில் எம்பிலிபிய, தனது நண்பருக்கு பிணை வழங்க ஏப்ரல் 30 அன்று நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தார்.
நீதிமன்றத்திற்குள் அசங்க இந்துனிலின் கைத்தொலைபேசி ஒலித்தது. அவர் கைது செய்யப்பட்டபோது பாதுகாப்பு அதிகாரிகள் அவரது சட்டைப் பையில் ஒரு லைட்டரையும் (lighter) கண்டுபிடித்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அசங்க இந்துனிலை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாகவும், பிணை வழங்கச் சென்ற அசங்க இந்துனிலும் அவரது நண்பரும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் சட்டத்தரணி சேனக பெரேரா கூறுகிறார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ஜெயசேகர ஆராச்சிகே அசங்க இந்துனில் 30/04/2025 அன்று காவலில் வைக்கப்பட்டு அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சந்தேகநபருக்குப் பொறுப்பான அதிகாரிகள், சந்தேக நபர் ‘திடீரென ஏற்பட்ட கடுமையான நோய்’ காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே 2, 2025 மாலை இறந்துவிட்டதாகத் தெரிவித்ததாகவும், 2025 மே 2ஆம் திகதி இரவு 10 மணிக்கு எம்பிலிபிட்டிய பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் ஆய்வாளருக்கு அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கண்காணிப்பாளர் வழங்கிய தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்குப் பின்னர், இறந்தவரின் உறவினரான கலகம முல்லகேவைச் சேர்ந்த லசித் சுரங்கவிடம் உடல் ஒப்படைப்பதற்கு, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் மே 3 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் சிறு சேவைகள் கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த மரணம் ஒரு தாக்குதலால் ஏற்பட்டதாக சந்தேகிக்கும் அசங்க இந்துனிலின் உறவினர்கள், அவரது மண்டை ஓடு சேதமடைந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் போது வைத்தியசாலை ஊடாக அறிந்ததாகக் கூறுகின்றனர்.
இறந்த தங்கள் உறவினர் சிறையில் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், அசங்க இந்துனிலின் நண்பரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அசங்க இந்துனிலின் மரணத்திற்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்யக் கோரும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் நிர்வாகப் பணிப்பாளர், சட்டத்தரணி சேனக பெரேரா, 2019ஆம் ஆண்டில் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழு ஒன்று தடிகளால் தாக்கப்படுவதை காட்டும் பல சிசிடிவி காட்சிகளை தனது அமைப்பு வெளியிட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வலியுறுத்துகிறார்.
ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் ஜயசேகர ஆராச்சிகே அசங்க இந்துனிலின் மரணத்தை மறைக்க ஒரு பெரிய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் சட்டத்தரணி மேலும் குறிப்பிடுகின்றார்.
பொலிஸ் விசாரணைகளுக்கு மேலதிகமாக, சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களத்தாலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.