முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் கவிஞருமான சிவபாலசுந்தரனின் கருத்துப் பதிவு
பாராளுமன்றத் தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கடந்த நிலையில் 6ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் வடஇலங்கை மக்கள் தவிர்க்கவேண்டியவர்களைத் தவிர்த்து தேர்வு செய்யவேண்டியவர்களைத் திறம்படத்தேர்வு செய்துள்ளார்கள் என
முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் கவிஞருமான சிவபாலசுந்தரனின் தனது முதநூல்ப் பக்கத்தில் கருத்துப் பதிவுசெய்துள்ளார்.
மேற்படி பதிவில் அவர் பின்வருமாறு தெரிவிக்கின்றார்
“பாராளுமன்றத்தேர்தல் முடிவுகளுக்கும் உள்ளூராட்சித்தேர்தல் முடிவுகளுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதைக்காண்பீர்!
பாராளுமன்றத்தேர்தலில் வடக்கில் தமிழ்த்தேசியக்கட்சிகளின் செயற்பாடுகள் மீதுகொண்ட அதிருப்தி காரணமாக திசைகாட்டியை யும் ஊசியையும் வெல்லவைத்தார்கள்.
அதன்விளைவாக அரசியல் அனுபவமற்ற, அரசியல் நாகரிகம் பேணாத, இன உணர்வு சிறிதுமற்ற, நூலிலாடும் பொம்மைகள்போன்ற பிரதிநிதிகள் தெரிவாகும் நிலை ஏற்பட்டது. இதன் விளைவை அனுபவித்த மக்கள் தற்போது உள்ளூராட்சித் தேர்தலில் அவர்கள்மீது அதிருப்தி அடைந்தவர்களாக அவர்களைப்புறக்கணித்து மீண்டும் தமிழ்த்தேசியக் கட்சிகளை சபையேற்றி யிருக்கிறார்கள்.
வடக்கு மக்களின் பாராளுமன்றத்தெரிவுகள் குறித்த பல்வேறு விமரிசனங்கள் அம்மக்களின் கல்வியறிவு தொடர்பாகவும் தமிழ்த்தேசிய உணர்வு தொடர்பாகவும் பெரும் விசனத்தைக்கொண்டிருந்தது.
6 மாதங்கள் கடந்த நிலையில் அவர்கள் அந்த விமரிசனங்களுக்குத் தக்க பதிலை வழங்கியிருக்கின்றனர். தவிர்க்கவேண்டியவர்களைத் தவிர்த்து தேர்வு செய்யவேண்டியவர்களைத் திறம்படத்தேர்வு செய்துள்ளார்கள்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் தொகை இன்னுமொரு 10 வீதம் அதிகமாக இருந்திருப்பின் திசைகாட்டியின் பிரதிநிதித்துவம் பூச்சியமாக இருந்திருக்கும். அத்தோடு வவுனியா மாநகர சபையும் முழுமையாக தமிழ்த்தேசியத்தின் கைகளில் விழுந்திருக்கும்.
எது எவ்வாறிருப்பினும் வெற்றிபெற்ற தமிழ்த்தேசியத்தரப்பு ஒற்றுமையாக ஒன்றிணைந்து சபைகளில் கட்சிபேதம் மறந்து மக்கள் நலனுக்காக பிரதேச அபிவிருத்தியில் கவனம்செலுத்தத் தவறுவார்களாயின் அடுத்துவரும் மாகாண சபைத்தேர்தலில் மக்களின் முடிவுகள் வேறுவிதமாக அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பை ஆயுதமாக்கி மக்களின் பெறுமதியான வாக்குகளின் பெறுமானத்தைக் கேவலப்படுத்தி சபைகளைச் சந்தைகளாக்குவீர்களாயின் மக்களின் பதிலடி சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு மரண அடியாக அமையும் என்பதை வெற்றிபெற்ற தரப்பினர் எச்சரிக்கையாகக்கொள்ளவேண்டும்.
ஒற்றுமையே பலம்!” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.