தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி பிரச்சினை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது துரை முருகனின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து துரைமுருகன் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் இலாகா மாற்றப்பட்ட நிலையில் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
