இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனால், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருநாடுகளும் மோதலை அதிகரிக்க கூடாது எனவும் மத்தியஸ்தம் செய்ய தயராக உள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக நேற்று பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய செபாஷ் ஷெரீப் கூறியதாவது: “இந்தியா நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவிகளின் ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். பாகிஸ்தான் தனது தற்காப்புக்காக ஒரு பயங்கரமான பதிலடியை வழங்க முடியும் என்பதைக் காட்டினோம். எல்லைப் பகுதியில், சுமார் ஒரு மணி நேரம் சண்டை நடந்தது. பாகிஸ்தான் விமானிகள் வான்வெளியில் இருந்து தாக்கினர், எதிரியின் விமானங்கள் துண்டு துண்டாகச் சிதறின. பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்கு நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்மை நம் பாதையிலிருந்து விலக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தான் ஒற்றுமையாக நிற்கிறது” என்றார்.
