கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் பல பாகங்களிலும் அதனைத் தொடர்ந்து கனடாவிலும் தனது பன்முக ஆற்றலாலும் பக்குவமான அணுகலினாலும் ஆயிரக்கணக்கானவர்களைக் கவர்ந்தவர் நல்லூர் சாம்பசிவஶ்ரீ. சோமஸ்கந்த குருஜி அவர்கள். அன்னாரின் வில்லுப்பாட்டுத்துறையின் சாதனை, பாடும் திறன் முகபாவங்களைக் காட்டி சொற்களின் இறுக்கத்தை உயர்த்திக் காட்டுகின்ற நடிப்புத் திறன், கவிதைகள் மூலம் தனது சமூகத்தின் மீதான அக்கறையையும் இனத்தின் மீதான தேசியப் பற்றையும் காட்டும் கவிதைகளை வடித்தல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட டாக்டர் சாம்பசிவஶ்ரீ. சோமஸ்கந்த குருஜி அவர்களின் கலை இலக்கியப் பங்களிப்புக்கு மகுடம் சூட்டும் வகையில் அமைந்த அவரது இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 3ம் திகதி சனிக்கிழமையன்று மாலை கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நூல்களின் வெளியீட்டு விழாவில் டாக்டர் சாம்பசிவஶ்ரீ. சோமஸ்கந்த குருஜி அவர்களின் ‘மாணவர் வில்லுப்பாட்டு’ மற்றும் ‘நினைவுப் பூக்கள் ‘ கவிதைத் தொகுதி ஆகியன வெளியிடப்பெற்றன.
மேற்படி வெளியீட்டு விழாவில் டாக்டர் சிவஶ்ரீ சோமஸ்கந்தக்குருக்கள் அவர்கள் ஆசியுரை வழங்கினார். நூல் அறிமுக உரைகளை வைத்தியர் போல் ஜோசப் அவர்களும் கோதை அமுதன் அவர்களும் ஆற்றினார்கள். சிறப்புரைகளை ‘உதயன்’ பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கமும் ‘கீதவாணி’ நடா ராஜ்குமாரும் வழங்கினார்கள். சிவஶ்ரீ குருக்கள் அவர்கள் வரவேற்புரையை சிவஶ்ரீ மணிவண்ணக் குருக்கள் வழங்கினார்கள்.
அனைத்து உரைகளும் காத்திரமாக அமைந்து தங்களை ஆசனங்களில் அமரவைத்திருந்தன என்று சபையில் அமர்ந்திருந்தவர்கள் நிகழ்ச்சியின் இறுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். குறிப்பாக வெளியீட்டு உரை நிகழ்த்திய டாக்டர் சாம்பசிவஶ்ரீ. சோமஸ்கந்த குருஜி அவர்களின் உரையும் இறுதியில் உறுதியுடனும் உவகையுடனும் கருத்தாளமிக்கதாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.