இந்தியாவை நோக்கி நேற்று 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன்களை இந்திய ராணுவம் நடுவானில் அழித்தது. முக்கியமான வான்பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தியது. இந்த சூழலில் நள்ளிரவில் இந்தியாவும் திருப்பி அடிக்கத்தொடங்கியது.
பாகிஸ்தான் நாட்டின் உணவு மற்றும் வேளாண் உற்பத்தியில் முக்கியமாக திகழும் கரியான் மற்றும் ஜலால்பூர் ஜெட்டா நகரில் இந்திய டிரோன்கள் தாக்குதலை தொடங்கின. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இந்தியா டிரோன் தாக்குதலை நடத்தியது. மேலும் பீரங்கி தாக்குதலையும் அதிகரித்தது. அதேநேரம் பாகிஸ்தான், காஷ்மீரின் ஸ்ரீநகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்த டிரோனை இந்தியா அழித்தது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலங்கள் இருளில் மூழ்கின.
மேலும் இந்த மாநிலங்களில் தொடர்ந்து அபாய ஒலி எழுப்பப்பட்டதால், பல இடங்களில் சைரன் ஒலிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இருநாடுகளும் மாறிமாறி எல்லைப் பகுதிகளில் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால், தற்போது இரண்டு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டி உள்ளது இந்நிலையில் அமைதியான வழிகளில் அரசியல் தீர்வுக்கான பாதைக்கு திரும்ப வேண்டும் என்று அண்டைநாடான சீனா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரு தரப்பினரும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக செயல்படவும், அமைதி மற்றும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், அமைதியான வழிகளில் அரசியல் தீர்வுக்கான பாதைக்குத் திரும்பவும், பதட்டங்களை மேலும் அதிகரிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலிருந்தும் விலகி இருக்கவும் நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம். இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் அடிப்படை நலனுக்கும், நிலையான மற்றும் அமைதியான பிராந்தியத்திற்கும் முக்கியமானதாக இருக்கும். சர்வதேச சமூகம் இதைத்தான் பார்க்க விரும்புகிறது. இந்த நோக்கத்திற்காக சீனா தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்கை வகிக்கத் தயாராக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.