ஆற்றில் எழுந்தருளிய பின் தற்காலிக மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே முல்லை பெரியாற்றின் மேற்கு கரையில் உப்புக்கோட்டையின் கிழக்கு கரையில் உப்பார்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் 3 நாள் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்று தொடங்கியது. விழாவையொட்டி உப்பார்பட்டி ஊருக்குள் உள்ள உற்சவர் வரதராஜ பெருமாள் சிலைக்கு பால், பன்னீர், சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கள்ளழகர் அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், முக்கிய வீதிவழியாக ஊர்வலமாக சென்றார். அப்போது பொதுமக்கள் எதிர்கொண்டு கள்ளழகரை வரவேற்று சிறப்பு அபிஷேகம் செய்தனர். எதிர்சேவையை தொடர்ந்து முல்லை பெரியாற்றின் கரையில் உள்ள மூலவர் கோவிலை அடைந்தார் கள்ளழகர். பின்னர் காலை 6.00 மணியளவில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் முல்லை பெரியாற்றில் இறங்கினார். பின்னர் உப்புக்கோட்டை முல்லை பெரியாற்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்த நொச்சி இலைகளால் வேயப்பட்ட தற்காலிக மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். பக்தர்கள் கள்ளழகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் உப்புக்கோட்டை வரதராஜபெருமாள், உப்பார்பட்டி வரதராஜ பெருமாள் என தமிழ்நாட்டிலேயே 2 குதிரை வாகனத்தில் ஒன்றாக ஆற்றில் இறங்கி எதிர் சேவை செய்வது வழக்கம். இந்த ஆண்டு உப்புக்கோட்டை கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக கோவிலின் மேல் இருந்த கலசம் கழற்றி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு கோட்டை வரதராஜ பெருமாள் முல்லைப் பெரியாற்றில் இறங்கவில்லை.