பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச காணொளி எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இதுதொடர்பான காணொளி வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு காவல்துறை விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்படுவதற்காக சேலம் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பளிக்க நீதிபதி நந்தினி தேவி நீதிமன்றத்திற்கு வந்தார். இதையடுத்து கைதான 9 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். சிபிஐ அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டோர், வழக்கு தொடர்புடையோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. நீதிபதி நந்தினி தேவி அளித்த தீர்ப்பில், பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.
திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 9 நபர்களையும் சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு அரசு தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் 9 பேருக்கும் தரப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குற்றவாளிகள் 9 பேரின் தண்டனை விவரங்களை நீதிபதி நந்தினி தேவி வாசித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.