பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச காணொளி எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில், நெல்லையில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு திமுக எம்.பி.கனிமொழி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் அதிமுக அரசு நிற்கவில்லை. இந்த வழக்கில் அதிமுகவினர் சிலருக்கு தொடர்பு இருந்ததால் வழக்குப்பதிவு கூட செய்யவில்லை. வழக்குப்பதிவு செய்து முறையாக விசாரணை செய்து இருந்தால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.. சிபிஐக்கு மாற்றியதை இபிஎஸ் பெருமையாக நினைக்காமல் வெட்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.