அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது. இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த 10-ந்தேதி அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். அதில், ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3985 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரிய கனிம வளத்திட்டங்களை செயல்படுத்த ரூ.16,300 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடியில் செமிகண்டக்டர் ஆலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என்றார்.