தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிபடுத்தி உள்ளார். பிளஸ்-2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியான நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாக உள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ்-1) பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசுத்தேர்வுகள் இயக்ககம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 9.00 மணிக்கு வெளியிட உள்ளார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.