நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர் (வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம்போல் குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென வீட்டு முன்பு பயங்கர சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அதனை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அப்போது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வசங்கர் உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் அவரது வீட்டின் வளாகத்தில் இருந்த மின்விசிறி, மின் விளக்கு உள்ளிட்ட சாதனங்கள் சேதம் அடைந்தன. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 வாலிபர்கள் அங்கு வந்து செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. மர்மநபர்கள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வரும் அந்த வாலிபர்கள் வீட்டின் முன்புள்ள தெருவில் வைத்து பெட்ரோல் குண்டை பற்ற வைப்பதும், 2 பேர் அடுத்தடுத்து 3 குண்டுகளை வீசுவதும் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து மர்ம நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர். செல்வசங்கர் கட்சி நிகழ்வுகளுக்கு கொடிகள் கட்டும் பணியை மொத்தமாக எடுத்து செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. செல்வசங்கர் அப்பகுதியில் உள்ள செல்லாயி அம்மன் கோவிலில் சாமியாடி வந்துள்ளார். இவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்த பாளையங்கோட்டை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர். ஏதேனும் அரசியல் தொடர்பான பிரச்சனைகளில் அவர் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனிடையே காவல்துறை குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
