இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு 5 நாட்களுக்கு பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் சென்றார். ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆபரேஷன் சிந்தூரில் தீரமாக செயல்பட்ட ராணுவ வீரர்களை சந்தித்தார். ராணுவ வீரர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். பாரத் மாதா கீ ஜே என முழங்கி ராஜ்நாத் சிங் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது: ராணுவ வீரர்களுக்கு இந்த தேசம் கடமைப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில் ராணுவ வீரர்களின் பங்களிப்பு, தியாகத்திற்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எதிரிகளின் முகாம்கள், இலக்குகளை இந்திய ராணுவம் அழித்தொழித்தது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிர் ஈந்த ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். இதுபோன்ற பாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் உங்களுடன் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடியின் திறமையான தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஆபரேஷன் சிந்தூரின்போது நீங்கள் அனைவரும் செய்தவற்றிற்காக முழு தேசமும் பெருமை கொள்கிறது. உங்கள் பாதுகாப்பு அமைச்சராக இருப்பதற்கு முன்பு, நான் ஒரு இந்திய குடிமகன். பாதுகாப்பு அமைச்சராக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு இந்திய குடிமகனாக உங்களுக்கு நன்றி தெரிவிக்க நான் இங்கு இருக்கிறேன். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய விதம் – ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். எதிரிகளை அழித்த அந்த சக்தியை உணர நான் இங்கே இருக்கிறேன். எல்லையில் உள்ள பாகிஸ்தான் முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகளை நீங்கள் அழித்த விதத்தை, எதிரிகளால் ஒருபோதும் மறக்க முடியாது என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.