பிரம்ரன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் நகரபிதா பெற்றிக் பிரவுண் அழுத்தமாகத் தெரிவிப்பு
(பிரம்ரன் மாநகரிலிருந்து ஆர். என்.லோகேந்திரலிங்கம்)
”இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவமும் ராஜபக்ச என்னும் கொடிய கொலையாளியின் சகாக்களும் இணைந்து நடத்திய இனப்படுகொலையினால் 2009 ம் ஆண்டு இலட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இலட்சக் கணக்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. இவ்வாறிருக்கையில் இனப்படுகொலை நிகழவில்லை என்று கூறுபவர்களும் உள்ளார்கள். இந்த நினைவுத்தூபியை இங்கு நிறுவக்கூடாது என்பதில் அந்தக் குழுவினர் தங்களால் இயன்ற அளவிற்கு முயன்றார்கள்.
ஆனால் பிரம்ரன் வாழ் தமிழ் மக்களும் தமிழ்க் கனேடியர்களும் இங்குள்ள அரசியல்வாதிகளும் ஒன்றாரியோ மாகாண முதல்வரும் அவரது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் லோகன் கணபதி மற்றும் விஜேய் தணிகாசலம் ஆகிய தமிழ் பேசும் அரசியல் தலைவர்களும் எமக்கு பக்க பலமாக இருந்தார்கள். எனவே இவ்வாறான மகா பொய்யர்கள் தோற்றுப் போனார்கள். ஆனால் எமது முயற்சியினால் இந்த நினைவுத் தூபி சோகத்திலும் கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. நான் இறுதியாகவும் உறுதியாகவும் ஒன்றைக் கூறுகின்றேன். அந்தப் பொய்யர்கள் கருதுவது போல, இலங்கையில் இனப்படுகொலைகள் நிகழவில்லை என்று கூறுபவர்கள் கனடாவில் எவரும் இருந்தால், அவர்கள் அனைவரும் கொழும்பிற்கு திரும்பிச் செல்லட்டும்”
இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று 10ம் திகதி பிரம்ரன் மாநகரில் மக்களால் அறியப்பெற்ற சிங்க்கூசி பூங்காவில் அமைக்கப்பெற்றுள்ள ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் நகரபிதா பெற்றிக் பிரவுண் அழுத்தமாகத் தெரிவித்தார்.
சுமார் 5000 பார்வையாளர் உணர்வுடன் கலந்து கொண்ட அன்றைய நினைவுத்தூபி திறப்பு விழாவில் தமிழ்த்தேசிய அரசியல் நோக்கம் கொண்ட அமைப்புக்கள் பலவற்றின் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இணைந்து நற்காரியம் ஒன்றை நிறைவேற்றினார்கள் என்றால் அது மிகையாகாது.
அன்றைய தினம் ஒன்றாரியோ மாகாணத்தின் அமைசசர்கள் பலரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மத்திய அரசாங்கத்தின் லிபரல் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவையும் பலத்தையும் நிரூபித்துச் சென்றார்கள் என்றால் அது மிகையாகாது.
இது இவ்வாறிருக்க, பிரம்ரன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்த நாளிலிருந்து இலங்கையில் அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பினைக் காட்டி வருகின்றார்கள். ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சரும் கனடா அரசாங்கத்திற்கு தனது அதிருப்த்தியை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் மூலம் தெரிவித்துள்ளார்..
இதைப் போன்று மகிந்த ராஜபக்சாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவரும் தங்கள் எதிர்ப்புக்களை பல வழிகளில் காட்டிவருகின்றனர்.
அவற்றிக்கு பதில் அளிக்கும் வகையிலும் எமது பிரம்ரன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் அவர்கள் தனது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றார்.
தனது பல பதிவுகளில் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக நாமல் ராஜபக்ஸவுக்கு பிரம்டன் முதல்வர் உடனுக்குடன் பதில்களை பதிவு செய்து வருகின்றார்.
“இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும்..!
கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனவும் கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு, அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை.
ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைள், வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்கு பதில், இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில், ஆடம்பரத்தில் மறைந்துள்ளது. இது வெட்கக்கேடான விடயம் எனவும் பிரம்டன் மேயர் அழுத்திச் சொல்லியுள்ளார்.
ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போல்பொட் ,ஸ்லோபடான் மிலோசோவிக்,ஹென்றிச் ஹிம்லர்,மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கும் மோசமானவை.
கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனவும் பிரம்டன் மேயர் தனது பதிவில் நாமல் ராஜபக்க்சவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்