பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் ‘நானும் ரவுடிதான்’, ‘அமரன்’ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர், ஆகாஷ் பாஸ்கரன். தற்போது டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்கள் தயாரித்து வருகிறார். தனுஷ் நடித்து, இயக்கி வரும் ‘இட்லி கடை’ படம்தான் அவரது தயாரிப்பில் வெளிவர இருக்கும் முதல் படமாகும். அதேபோல சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தையும் தயாரிக்கிறார். அதனைத்தொடர்ந்து அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ படத்தை அவரே இயக்கி தயாரிக்கிறார். இதுதவிர, சிம்புவின் 49-வது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்றது. மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களையும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் கூட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தனுஷ், நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
