தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம், கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறுகையில், இந்த கூட்டத்துக்கு கட்சியின் செயல் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சிக்குள் அப்பா, மகன் என்ற கோஷ்டி பிரச்சனை ஏதுமில்லை. சட்டசபை தேர்தலில் நிச்சயமாக கூட்டணி உண்டு. 10.5 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு கடுமையான போராட்டம் நடத்துவோம்.
சிங்கத்தின் கால்கள் பழுதுபடவும் இல்லை, சீற்றம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் அதிகமாகி கொண்டுதான் உள்ளது என்று கூறினார். இதையடுத்து பா.ம.க.வில் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் முற்றுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தந்தை – மகனிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்துகிறேன். பா.ம.க.வில் விரைவில் சுமூக சூழல் திரும்பும். நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக முழு முயற்சி எடுத்து வருகிறேன். பா.ம.க.விற்கு நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். விரைவில் ராமதாஸ் – அன்புமணி இருவரும் சந்திப்பார்கள். நேற்று இரவு முழுவதும் ராமதாசுடன் பேசி கொண்டிருந்தேன். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.