கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா மட்டுமே எதிர்வரி விதித்து எதிர்வினை ஆற்றியது. பின்னர் சர்வதேச அழுத்தம் காரணமாக பின் அந்த வரிவிதிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளார். இதனிடையே மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருக்கிறது. வரி இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா விருப்பம் தெரிவித்தது” என்று டிரம்ப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க பொருட்கள் மீது 100% வரி குறைப்புக்குக் கூட இந்தியா தயாராக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த டிரம்ப், “உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக தாங்கள் இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அமெரிக்க பொருட்கள் மீது 100% வரி குறைப்புக்குக் கூட இந்தியா தயாராக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், அது விரைவில் வரும்” என்று தெரிவித்தார்.
