இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் இஸ்ரேலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 2 துறைமுகங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனின் ஹுடைடா மற்றும் அஸ் சலிப் நகரங்களில் உள்ள துறைமுகங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு, பாதிப்பு தொடர்பான விவரம் இதுவரை வெளியாகவில்லை.
