யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வினை பரிஸ் நகரில், கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் யூன் மாதம் எட்டாம் திகதி, பரிஸ் இன் புறநகர் பகுதியான Villeneuve Saint- Georges எனும் இடத்தில் உள்ள Espace Shine மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
ஈழத் தமிழரின் கல்வி வளத்தின் அதி உயர் நிலையமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது பல முற்போக்கான அறிஞர்களின் விடாமுயற்சியினால் 1974 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்களில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று ஐம்பது ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. இச் சிறப்பான நிகழ்வைப் புலம்பெயர் தேசங்களிலும், குறிப்பாக அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளிலும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் எதிர் வரும் ஆனித் திங்கள் எட்டாம் நாள் கொண்டாடுவதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன.
இப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட வேளை இரு பீடங்களை மட்டுமே கொண்ட ஒரு வளாகமாகவே இருந்து, இன்று பதின்மூன்று க்கும் மேலான பீடங்களைக் கொண்டு நாட்டின் முன்னணியில் உள்ள முழுமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மிளிர்கிறது. திருநெல்வேலியில் மையம் கொண்டு மருதனார்மடம், கைதடி, கிளிநொச்சியாகக் கிளைத்து, பரந்து நீண்டு இருக்கிறது. இதன் இன்னொரு கிளையாயிருந்த வவுனியா வளாகம் இன்று தனிப் பல்கலைக்கழகமாக வளர்ந்திருக்கின்றமையும் இதற்கான சிறப்பாகக் கொள்ள முடியும். முப்பதாண்டு கால கொடும் யுத்தத்துக்கும் முகம் கொடுத்து, அதன் பலமான அடித்தளம், நம்மவரின் சலிப்பின்றிய கடின உழைப்பு ஆகியவற்றால் தொடர்ந்து வளர்ந்தபடி நிமிர்ந்து நிற்கிறது.
உயர் கல்வி நிமித்தமும் போரின் தாக்கத்தாலும் இப் பல்கலைகழக பட்டதாரிகள் உலகெங்கும் இடம்பெயர்ந்து அந் நாடுகளில் திறமைமிக்க கல்விமான்களாக, அந் நாடுகளின் முன்னேற்றத்துக்கு துணை நிற்பது, நம் பல்கலைக்கழக கல்வித் தரத்தைப் பறைசாற்றுகிறது. உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகளை நிகழ்த்தக் கூடிய ஆய்வாளர்களைப் புலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தொடர்ந்து உருவாக்கிய வண்ணமிருக்கிறது. சொல்லொணா துயர்களைக் கடந்த நம் மக்களுக்கும் மட்டுமின்றி நம் பல்கலைக் கழகத்துக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ புலம் பெயர் சமூகம் ஒரு வளாகமாக இருப்பது கண்கூடு.
சாதாரண பல்கலைக்கழகங்கள் போலன்றி யாழ் பல்கலைக்கழகமானது தாங்கொணா பேரிடர் களுக்கு முகம் கொடுத்தபடி எம்மவரைத் தாங்கி நிற்கின்றது. அதன் ஐம்பதாண்டு கால இருப்பென்பது பல நூற்றாண்டுகள் கடந்த பயணத்துக்கு இணையாகும்.
யாழ் பல்கலைக்கழகத்தினதும், வடக்கு கிழக்கு பிரதேச வளர்ச்சிக்கும் பல முயற்சிகளை செய்து வரும் LIFT ஆய்வு அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையுடன், பிரான்ஸ் இல் வாழும் யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்து உள்ளார்கள். எமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இசை, நடன நிகழ்ச்சிகள், இராமநாதன் நுண்கலை பீடத்தின் பழைய மாணவர்களால் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களிலும் பரந்து பட்டு வாழும் , பல பீடங்களையும் சார்ந்த பழைய மாணவர் ஒன்று கூடும் ஒரு வரலாற்று நிகழ்வாக, இந்த பொன் விழா இருக்கும் என, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள +33 7 53 50 93 96 என்ற இலக்கத்துடன் WhatsApp மூலமாக அல்லது uojfrance@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.