அமெரிக்காவின் லூசியானா மாநிலம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை உள்ளது. அங்கு தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறைச்சாலையில் எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இந்த பாதுகாப்பையும் மீறி கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைதிகள் சிலர் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் கழிப்பறை சென்றுள்ளனர். பின்னர் கழிப்பறையின் பின்னால் உள்ள துளை வழியாக 10 கைதிகள் ஏறி குதித்து தப்பினர். ஆனால் இந்த சம்பவம் நடந்த 7 மணி நேரத்துக்குப் பிறகே சிறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தப்பி சென்ற கைதிகள் சிறையில் இருந்து வெளியேறியதும் சீருடைகளை மாற்றி விட்டு வேறு ஆடைகளை அணிவது தெரிய வந்தது.
பின்னர் சந்தேகம் வராத வகையில் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கைதிகள் தப்பிச் சென்ற பாதையைச் சுற்றியுள்ள சுவரில் காவல்துறைக்கு சவால்விடும் வகையில் வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். குறிப்பாக, “உங்களால் முடிந்தால் எங்களைப் பிடியுங்கள்” என்று எழுதியிருந்தனர். ஆபாச வார்த்தைகளையும் எழுதியுள்ளனர்.
தப்பியோடியவர்களில் இதுவரை 4 கைதிகள் சிக்கி உள்ளனர். மற்ற கைதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், கைதிகள் நள்ளிரவு நேரம் தங்களது அறையில் இருந்து வெளியேற ஊழியர்கள் சிலர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. கைதிகளுக்கு உடந்தையாக செயல்பட்ட 3 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.