ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இரு வாரங்களுக்கு பின்னர் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை குறிவைத்து, இந்திய ஆயுதப்படை தாக்குதலை நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்த நடவடிக்கைக்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் மோதலை நிறுத்தி கொண்டன. ஆனால், தாக்குதல் நடத்துவது இந்தியாவின் எண்ணம் இல்லை என உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டிய நடவடிக்கையில் இந்தியா இறங்கியது. பாகிஸ்தானை தாக்கும் எண்ணம் எதுவும் இந்தியாவுக்கு இல்லை என மத்திய அரசு கூறி வந்ததுடன், பயங்கரவாத இலக்குகளையே தாக்கி அழிக்கும் நோக்குடன் செயல்பட்டோம் என இந்தியா தெரிவித்தது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி உலக நாடுகளின் தலைவர்களுக்கு விரிவாக விளக்குவதற்காக, பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த சூழலில், இதனை அப்படியே பின்பற்றும் வகையில் பாகிஸ்தானும் குழு ஒன்றை உலக நாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
இதுபற்றி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி நேற்று கூறும்போது, பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற்ற சூழலில் பாகிஸ்தானின் நிலை என்னவென்று எடுத்து கூறுவதற்காக குழு ஒன்றை அமைத்து அதனை தலைமையேற்கும்படி என்னிடம் கேட்டு கொண்டார் என்றார்.
இந்தியாவின், பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ய சகிப்பு தன்மை மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விளக்குவதற்காக மத்திய அரசு நியமித்த 7 பேர் கொண்ட குழுவில் காங்கிரஸ் தலைவர் சசி தரூர், பா.ஜ.க. தலைவர் ரவி சங்கர் பிரசாத், ஐக்கிய ஜனதா தள தலைவர் சஞ்சய் குமார் ஜா, பா.ஜ.க.வின் மற்றொரு தலைவர் பைஜெயந்த் பாண்டா, தி.மு.க. தலைவர் கனிமொழி கருணாநிதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் (சரத் பவார்) சுப்ரியா சுலே மற்றும் சிவசேனா தலைவர் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உள்ளனர். வருகிற 22-ந்தேதி இந்த குழு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 32 நாடுகளுக்கு அந்த குழு செல்ல உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களையும் சந்திக்க உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.