உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 179வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் – ரஷியா அதிகாரிகள் இடையே துருக்கியில் 15ம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நீடித்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் உள்ள கைதிகளை பரிமாறிக்கொள்வது தொடர்பாக மட்டுமே சுமூக தீர்வு எட்டப்பட்டது. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், உக்ரைனின் சுமி மாகாணம் பிலோபிலியா பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் மீது ரஷியா நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்து இரு தரப்பும் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளதால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தனித்தனியே தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தவிர்க்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
