மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா . இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனிடையே, அந்நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பிற்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்புகள் பொதுமக்கள் மீதும் கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் பார்னோ மாகாணம் பஹா பகுதியிலுள்ள மல்லாம் கரமதி, வாடன்ஷிதி கிராமங்களுக்குள் கடந்த வியாழக்கிழமை போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் புகுந்தனர். அங்கிருந்த கிராம மக்களில் 57 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். மேலும், 70க்கும் மேற்பட்ட மக்களை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
